×

பிச்சாவரத்தின் அழகை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே 17 கிலோ மீட்டர் தொலைவில் எழில் கொஞ்சும் அழகிய சதுப்பு நிலக்காடுகள் அடங்கிய சுற்றுலா மையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை தந்து படகு சவாரி செய்து வருகின்றனர். நேற்று காலை பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு செக் குடியரசு நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் கொண்ட குழுவினர் சைக்கிள்களில் வந்து சுற்றி பார்த்து ரசித்தனர்.
அவர்கள் தங்கள் நாட்டில் இருந்து வரும்போது தங்கள் உடமைகளுடன் சைக்கிள்களையும் எடுத்து வந்துள்ளனர்.

நேற்று காலை அவர்கள் புதுவையில் இருந்து பிச்சாவரத்திற்கு சைக்கிள்களில் வந்தனர். பின்னர் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சைக்கிள்களை நிறுத்தி விட்டு படகுகளில் சென்று சதுப்பு நிலக்காடுகளில் உள்ள சுரபுன்னை செடிகள் மற்றும் அங்குள்ள பறவைகள் ஆகியவற்றை கண்டு ரசித்தனர். பின்னர் சைக்கிள்களில் கிள்ளை வழியாக சிதம்பரத்திற்கு புறப்பட்டனர்.

கிள்ளை அருகே மீனவர்கள் சாலையில் காய வைத்திருந்த மீன்கள் மற்றும் கருவாடுகளை பார்த்து என்னவென்று கேட்டு அதனை புகைப்படம் எடுத்து கொண்டனர். அருகில் உள்ள கிராமங்களை சுற்றிபார்த்துவிட்டு அங்கிருந்து புறவழிச்சாலை வழியாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றனர். அங்கு கோயிலில் கலைநயமிக்க ராஜ கோபுரங்களையும், சிற்பங்களையும் கண்டு ரசித்தனர். சிதம்பரத்தில் இருந்து பூம்புகார் உள்ளிட்ட பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கொச்சின் சென்று அங்கிருந்து தங்கள் நாட்டிற்கு செல்ல போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pichavaram, abroad, tourists
× RELATED நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில்...