×

மயானத்துக்கு செல்ல வழியில்லை....... தண்ணீரில் மிதந்து சடலத்தை சுமந்து செல்லும் அவலநிலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே காமராச நல்லூர் கிராமத்தில் மயானத்துக்கு செல்ல முறையான பாலம் வசதி இல்லாததால் ஓடை தண்ணீரில் மூழ்கியும் நீச்சலடித்தபடியும் சடலத்தை தூக்கிச்செல்லும் அவல நிலை நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிறுத்தொண்ட நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காமராச நல்லூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இறந்தவரின் சடலத்தை இடுகாட்டிற்கு கொண்டு செல்ல முறையான சாலை வசதி இல்லை என்றும் இறந்தவரின் சடலத்தை அந்தபகுதியில் உள்ள 200 மீட்டர் அகலமுள்ள ஓடை நீரில் இறங்கி தான் தூக்கிச்செல்ல வேண்டிய அவல நீடிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் காமராச நல்லூரில் சொர்ணம் என்ற மூதாட்டி இறந்து போனதால் அவரது சடலத்துடன் ஓடை நீரில் இறங்கி சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டது. இதையடுத்து தங்கள் ஊரில் இறந்தவர்களின் சடலங்களை எளிதாக இடுகாட்டிற்கு கொண்டு செல்ல முறையான சாலைவசதி கேட்டு அங்குள்ள மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை தாசில்தார் சேகர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஓடைக்கு மேலாக சிறிய பாலம் அமைத்து கொடுப்பது தொடர்பான திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை நிதி ஒதுக்கியதும் இந்த பணிகள் விரைவாக நடைபெறும் என்றும் கூறி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து சவப்பெட்டியை தலையில் சுமந்தவாறு, தண்ணீரில் மூழ்கியும், நீச்சலடித்தபடியும் ஆபத்தான வகையில் ஓடையின் அக்கரையில் உள்ள இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். இந்த கிராமத்து மக்களில் பெரும்பாலான நபர்களுக்கு நீச்சல் தெரிந்து இருப்பதால் அக்கரைக்கு சடலத்தை கொண்டு செல்ல முடிவதாகவும், வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்கள் இடுகாட்டில் வந்து இறந்தவருக்கு இறுதி மரியாதை செய்ய முடிவதில்லை என்றும் தெரிவித்த கிராமத்தினர் இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் விரைவாக தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cemetery , cemeter, body, water, tuticorin
× RELATED திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி...