×

தமிழகத்தில் உள்ள அனைவரும் உறுப்புதானத்துக்கு பதிவு செய்ய வேண்டும் - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைவரும் உடலுறுப்பு தானத்துக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.சுகாதாரத்துறை சார்பில் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் விழா சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். இதில், உடலுறுப்பு தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி டாக்டர்கள் பேசினர். உடல் உறுப்புதானம் வழங்கியவரின் குடும்பத்தினருக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ்களை  அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
பின்னர், அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உறுப்பு தான ஆணையம் டிரான்ஸ்டான் அமைக்கப்பட்டு 2014ம் ஆண்டு முதல் 1,225 பேரிடம் 7,094 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும். இறக்கும் தருவாயில் உள்ள ஒருவரின் உடலுறுப்பை குடும்பத்தினர் தானம் செய்ய முன்வருவது, மிகக்கடினமான காரியம். அப்படியிருந்தும் கனத்த இதயத்தோடு பலர் உறுப்புதானம் வழங்கியுள்ளனர்.  எய்ம்ஸ் மருத்துவமனையில் வட இந்தியர்கள்தான் பணியாற்றுவார்கள் என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுவது தவறான தகவல். மதுரையில் பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை, திட்டமிட்டபடி 36 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும். அந்த மருத்துவமனை தமிழக சுகாதாரத்துறையில் ஒரு மைல் கல். தமிழகத்தில் அனைவரும் உறுப்புதானத்துக்கு பதிவு செய்ய வேண்டும். நான், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உறுப்பு தானத்துக்கு பதிவு செய்துள்ளோம். அதனால் அனைவரும் உறுப்புதானம் செய்ய முன்வந்து, அதற்காக பதிவு செய்ய வேண்டும்.  இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Everybody ,Tamil Nadu ,Organizational - Health Minister , ody organ donation, registration and health minister Vijayapaskar
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...