×

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரை எம்பிக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு, ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும் என் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ெஜட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து குடிமக்களும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து வருகின்றனர். சிறு சம்பவங்கள் கூட சாதாரண மனிதரையும் சென்றடைகிறது. இதன் காரணமாக விவாதங்களில் பங்கேற்காதவர்கள் மக்களின் வெறுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

மக்கள் மனநிலையை கருத்தில் கொண்டு, எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் பங்கேற்று பட்ஜெட் கூட்டத்தொடரை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் அரசின் நலனை கருத்தில் கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். அனைத்து எம்பிக்களும் தங்களது தொகுதிகளுக்கு செல்ல நேரிடும். எனவே நேர்மறையான நடவடிக்கைகளை நீங்கள் வெளிப்படுத்தினால் அது உங்களுக்கு நேர்மறை பலனை கொடுக்கும். மேலும் எம்பிக்கள் மீதான மக்கள் மனநிலையையும் அது பிரதிபலிக்கும். அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். நாடாளுமன்றம் சுமூகமாக இயங்குவதை வரவேற்கிறேன். எதிர்கால இந்திய கட்டுமானத்துக்கு அனைத்து எம்பிக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு; வெங்கையாவும் வலியுறுத்தல்: ‘‘அரசியல் கருத்து வேறுபாடுகளால் நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பாதிக்கப்படக்கூடாது. எதிர்க்கட்சிகள் இத்தொடரை சிறப்பாக நடத்த அமைதியான முறையில் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று நடத்தினார். இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உ்ள்ளிட்ட 35 அமைச்சர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், சமாஜ்வாடி கட்சித் தலைவர் ராம்கோபால் யாதவ், அதிமுகதலைவர்களில் ஒருவரான நவநீத கிருஷ்ணன் திமுகவிலிருந்து திருச்சி சிவா மற்றும் சிவசேனா தலைவரான சஞ்சய் ரவத் ஆகியோரும் கலந்து கொண்டார். கூட்டத்தில் வெங்கையா நாயுடு பேசுகையில், ‘‘குடியரசு நாட்டில் நாடாளுமன்றம் முக்கிய துாணாகும். இதன் மூலமே ஒரு நாட்டின் இறையாண்மை உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே அரசியல் வேறுபாடுகள் மக்களவையின் நிகழ்வுகளை பாதித்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகள் அமைதியான முறையில் கூட்டத்தொடரை நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi , Parliamentary session, creative discussions, Prime Minister Modi
× RELATED சொல்லிட்டாங்க…