×

கோவையில் பிடிபட்டு டாப்சிலிப்பில் விடப்பட்ட சின்னதம்பி யானை ஊருக்குள் புகுந்தது

பொள்ளாச்சி: கோவையில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனத்தில் விடப்பட்ட  காட்டு யானை சின்னதம்பி நேற்று பொள்ளாச்சி அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.கோவை அருகே ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை சின்னதம்பியை கும்கிகள் உதவியுடன் கடந்த 25ம் தேதி மயக்க ஊசி செலுத்தி  வனத்துறையினர் பிடித்தனர். பின்னர், யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள அடர்ந்த வனபகுதியான வரகளியாறு பகுதியில் விடப்பட்டது.

 இந்நிலையில், வனத்தில் விடப்பட்ட சின்னதம்பி யானை இடம் பெயர்ந்து நேற்று முன்தினம்  நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்திற்குள் புகுந்தது. ஒரு மணியளவில், கோட்டூர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த வனக்குழுவினர் கோட்டூர் வீதியில் சுற்றுத்திரிந்த சின்னதம்பி யானையை, தனித்தனிக்குழுவாக சென்று பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும்  வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அதிகாலை வரை சின்னதம்பி யானை கோட்டூர் மற்றும் அங்கலக்குறிச்சி கிராமத்திற்கிடையே உள்ள வீதிகளில் அங்குமிங்குமாக உலா வந்தது. இதை தொடர்ந்து வனத்துறைனர் ஒலிபெருக்கி மூலம், யாரும் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம். யானையை தொந்தரவு செய்வது போன்ற செயலில் ஈடுபட கூடாது என எச்சரித்தனர்.

 நேற்று காலை சுமார் 7 மணிவரை சின்னதம்பி யானை, குடியிருப்பில் பல வீதியில் சுற்றியவாறு இருந்தது. சில வீட்டின் முன்பு நடப்பட்ட தடுப்பு கம்புகளை தள்ளிவிட்டு பிளிறியவாறு சென்றது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து தொடர்ந்து விரட்டும்பணியில்  ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு, கோபால்சாமி மலையடிவாரத்தை யானை சென்றடைந்தது. இருந்தபோதிலும் சின்னதம்பி யானை மீண்டும் கிராமத்திற்குள் புகுந்துவிடாமல் இருக்க, அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், ரேடியோ காலர்  மூலம் அந்த யானை எங்கெங்கு செல்கிறது என கண்காணிக்கப்படுகிறது.

கும்கி வரும்
காட்டுக்குள் செல்லாமல், சின்னதம்பி யானை அடம் பிடித்தால், மீண்டும் டாப்சிலிப் முகாமில் உள்ள கும்கிகள் உதவியுடன் பிடித்து வனத்தில் விடாமல், வரகளியாரில் உள்ள கூண்டில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  அந்த மாதிரியான சூழ்நிலை வந்தால், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnatambi , Wild elephant sinnatambi, kovai, topsilip
× RELATED திருப்பத்தூரில் கந்துவட்டி...