×

88 பேர் கொல்லப்பட்ட அசாம் குண்டுவெடிப்பு வழக்கு போடோ தலைவர் ரஞ்சன், 9 பேருக்கு ஆயுள் தண்டனை: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

கவுகாத்தி: அசாமில் 88 பேர் கொல்லப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் போடோலாந்து தலைவர் ரஞ்சன் டைமரி உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசாமில் கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி கவுகாத்தி, கோக்ரஜ்ஹர், பான்கைகோன் மற்றும் பார்பெடா ஆகிய இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தது.  இந்த சம்பவங்களில் 88 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அசாம் போலீசார் விசாரித்து வந்த வழக்கு, சிபிஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 22 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர். 2011ம் ஆண்டு வழக்கின் விசாரணை தொடங்கியது. 2017ம் ஆண்டு சிபிஐ விரைவு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. விசாரணையின்போது 650 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. 600க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டன, இந்த வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்ட போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரஞ்சன் டைமாரி, கடந்த 2010ம் ஆண்டு வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் கவுகாத்தி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 2013ம் ஆண்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.

விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில் இந்த வழக்கு கடந்த திங்களன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், ரஞ்சன் டைமாரி உட்பட 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து உடனடியாக ரஞ்சனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், இவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த வழக்கில்  சிபிஐ சிறப்பு நீதிபதி அபரேஷ் சக்ரபார்த்தி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நேற்று அறிவித்தார். இதில், ரஞ்சன் டைமாரி மற்றும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 3 பேர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட அபராத தொகையை செலுத்தியதால் விடுவிக்கப்பட்டனர். மேலும், இரண்டு பேர் தங்கள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டதால் விடுவிக்கப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranjan ,Bodo ,court ,CBI , Assam blast case, CBI,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...