×

சம வேலைக்கு சம ஊதியம் அளிக்காவிட்டால் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் : அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் அறிவிக்காவிட்டால் ரேஷன் கடை ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.சம வேலைக்கு சம ஊதியம், தனித்துறை, பணிவரன்முறை, ஓய்வூதியம், ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு 7 பேர் குழுவை கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. இதனால் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவில்லை.ஆனாலும், கடந்த 5 மாதமாக ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாமல் காலம்தாழ்த்தி வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6ம் தேதி ஒருநாள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

இதையடுத்து ேரஷன் கடை ஊழியர்கள் சங்கமான தொமுச, ஐஎன்டியுசி, சிஐடியு, ஜேஎம்எஸ், ஏஐசிசிடியு உள்ளிட்ட சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ரேஷன் கடை ஊழியர்கள் குறைவான சம்பளம் வாங்கினாலும், அரசின் நலத்திட்ட உதவிகளை எவ்வித தடையும் இல்லாமல் வழங்கி வருகிறோம். குறிப்பாக அரசு அறிவித்த பொங்கல் சிறப்பு திட்டம், குடும்ப அட்டைகளுக்கு தலா ₹1000 வழங்கும் பணியை மிகவும் சிறப்பாக செய்துள்ளோம். ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசால் அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்து ஒரு மாதம் ஆகியும் எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது.இந்நிலையில், சில சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பிற கோரிக்கைகளை அரசிடம் இருந்து பெற, அனைத்து சங்கங்களும் ஒற்றுமையாக இணைந்து போராட வேண்டும். அதனால் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தமிழக அரசிடம் இருந்து நல்ல அறிவிப்பு வரவில்லை என்றால், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாக இருந்து பேசி முடிவு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ration shop employees ,unions , Equal pay for equal work, ration shop staff, fight
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...