×

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு?

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு, 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.22ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிகள் முடங்கின. இதனைத்தொடர்ந்து அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அவர்களுக்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

எனவே தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, இன்று மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 97% பேர் பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனி, ஞாயிறு தவிர 6 நாட்களாக அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே வேலை நாட்களில் பணிக்கு வராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 31ம் தேதியன்று சம்பளம் வழங்க வேண்டிய நிலையில், அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்ட சம்பள பட்டியலை அரசு திரும்ப பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கடைசி கெடு விதித்துள்ளது. அவ்வாறு பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது 17b நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,government ,servants ,protest , Jacto-Geo, protest, government employees, salary, government
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...