×

சென்னையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.22ம் தேதிமுதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிகள் முடங்கின. இதையடுத்து தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டது. எனினும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது. எனவே தற்காலிக ஆசிரியர்கள் பணிக்காக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அதில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என எச்சரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் இன்று மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பொருத்தவரை 70 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களிடம் இனி போராட்டம் நடத்த மாட்டோம் என கடிதம் எழுதி வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி கூறியுள்ளார். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 602 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக 447 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மொத்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,ministers ,struggle ,Chennai ,Joy , Chennai,The Jacko-Geo Scramble,Ministers,Chief Minister Palanisamy
× RELATED மக்களவை தேர்தல்: 13 ஒன்றிய அமைச்சர்கள் தோல்வி