×

கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள்; கலக்கத்தில் அதிகாரிகள்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் வெளியாகியிருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டிற்கு முன்னர் இருந்த சிலையில் மயில் வாயில் பூ மற்றும் லிங்கம் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது உள்ள சிலையில் மயில் வாயில் பாம்பு இருப்பது போன்று உள்ளது. இது தொடர்பாக அப்போதைய கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் என 40-க்கும் மேற்பட்டோரிடம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் சிலைகள் மாற்றப்பட்டது உறுதியானது. அறநிலையத்துறை சட்டப்படி கோயில்சிலை, நகைகள் பாதுகாக்க வேண்டியது செயல் அலுவலர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரியின் பொறுப்பு. இதன்டி அப்போதைய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் துணை ஆணையரும், தற்போதைய கூடுதல் ஆணையருமான திருமகள் கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் வலுவாக இருந்தும் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சிலைகள் மாற்றப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

புன்னைவன்னநாதர் சன்னதியில் மயில் சிலைக்கு விழாக்காலங்களில் வெள்ளி கவசம் சாத்துவார்கள். தற்போதுள்ள மயில் சிலைக்கு வாயில் பாம்பு சிற்பம் உள்ளதால் வெள்ளி கவசத்தை சாற்றினால் அது சிலையுடன் பொருந்தவில்லை. இதற்கான படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் மூலம் சிலை மாற்றப்பட்டது ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து கூடுதல் ஆணையர் தப்பமுடியாது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : transfer ,Kapaleshwarar , Kabaliswarar Temple, statues of change, personnel, resources output, peacock statue