×

கடைகள் ஆக்கிரமிப்பு, குப்பைகளால் அழகை இழந்து வரும் அழகிய மெரினா: நீளமான கடற்கரைக்கு தனி திட்டம் வகுக்க மக்கள் கோரிக்கை

சென்னை: விற்பனை என்ற பெயரில் கடற்கரை மணல் பரப்பில் ஆக்கிரமித்துள்ள கடைகள், அதன் மூலம் டன் கணக்கில் சேரும் குப்பைகளால் உலகின் அழகிய மற்றும் நீண்ட கடற்கரையான மெரினா அதன் அழகையும், நோய்  பரப்பும் இடமாக மாறிவருவதை தடுக்க வேண்டும். அதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் உள்ள மிக நீளமான கடற்கரை மெரினா. மெரினா கடற்கரைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும்  வந்து கொண்டே இருக்கிறார்கள். நேற்று கூட குடியரசு தினத்தை  முன்னிட்டு குடும்பம் குடும்பமாக தமிழகத்தின் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

 இவர்கள் மெரினா கடற்கரைக்கு வருவதன் மூலம் மாநகர பஸ்களில் முக்கிய நாட்களில் வசூலை அள்ளுகிறது. இதனால் அரசுக்கு வருவாயும் வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் மெரினா கடற்கரையை யாரும் முறையாக  பராமரிப்பது இல்லை. இதனால் மெரினாவிற்கு வரும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும் சொல்வதற்கில்லை என்று பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்கிறது.இந்நிலையில்  தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார  பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி தெருவோர வியாபாரிகளை முறைப்படும் பணியை மாநகராட்சி தொடங்கியது. இதன்படி நடத்திய கணக்கெடுப்பில் மெரினா கடற்கரையில் மட்டும் 2200  கடைகள் இருப்பது  கண்டறியப்பட்டது. இத்தனை கடைகளுக்கு யார் லைசென்ஸ் கொடுத்தது. இவர்கள் எப்படி மெரினவிற்குள் கடை வைக்கும் அளவுக்கு நுழைந்தனர் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இதற்கு ஒரே பதில் லஞ்சம் ெபற்றவர்களால் இந்த அனுமதி சட்டத்துக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மெரினாவின் பாரம்பரியத்தை காக்க வேண்டும். சுத்தமாக வைக்க வேண்டும் என்று கருதிய நீதிமன்றம்  மெரினா கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளை ஒழுங்குப்படுத்த உத்தரவிட்டது. குறிப்பாக மெரினா கடற்கரையை துாய்மைபடுத்த ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். லுாப் சாலையில் உள்ள மீன் கடைகளை முறைப்படுத்த  வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் அந்தப் பணியை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், காவல் ஆணையர் விஸ்வநாதன் நடந்து சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மெரினா கடற்கரையில்  கடைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் 500 கடைகளுக்கு மேல் அனுமதி வழங்க கூடாது என கடும் நிபந்தனை விதித்தது.

ஆனால் வழக்கம்போல நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள் மெரினா சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக மெரினாவில் உள்ள கடைகள்  அனைத்தும் குப்பைகளை கடற்கரை மணலில் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் இரவு 10 மணிக்கு மேல் மெரினா மணல் பரப்பு முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது. இந்த குப்பைகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாதுகாப்பு: இரவு நேரங்களில் மெரினா கடற்கரைக்கு வருவோரில் சிலர் குடித்து விட்டு வருகின்றனர். இதனால் பொது மக்கள் மெரினா கடற்கரைக்கு வரவே அச்சப்படுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெரினா  கடற்கரையின் மணல் பரப்பில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருட்டி விட்டால் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமைதான் காணப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்: கடற்கரையே இப்படி என்றால் இணைப்பு சாலையில் நிலைமை இதை விட மேசமாக உள்ளது. இணைப்பு சாலை ஓரத்தில் மீனவர்கள் மீன் விற்பனை செய்துவருகின்றனர். பட்டினப்பாக்கம் கடற்கரையில்  இருந்து, கலங்கரை விளக்கம் வரை இணைப்பு சாலையில் ஆங்காங்கே பல இடங்களில் மொத்தமாக மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு மீன் வாங்க வருகிறவர்கள் குறிப்பாக கார்களில் வருகிறவர்கள்  சாலையின் நடுவிலேயே நிறுத்தி விட்டு மீன் வாங்கச் செல்கின்றனர். இடையில் இரு சக்கர வாகனத்தில் செல்கிறவர்களும் வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் இணைப்பு சாலையில் வாகனங்களில் செல்ல  முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் செல்ல முடியாத நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது.மேலும் மீன் வியாபாரிகள், அந்த மீன் கழிவுகளை அந்த இடத்திலேயே  கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் செல்லும் பொது மக்கள் மூக்கை மூடிக் கொண்டுதான் செல்கின்றனர்.

அரசியல்வாதிகள் தலையீடு: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளின் எண்ணிக்கைய குறைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான கடைகள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன்  நடத்தப்படுவதால் அவற்றை அகற்ற முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,மெரினா கடற்கரை மணல் பரப்பை துாய்மை படுத்த நவீன  இயந்தியரங்கள் வாங்கப்பட்டுள்ளன. தூய்மை பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் சிசிடிவி கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சுதேசி தர்ஷன் திட்டத்தின்  கீழ் ₹10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன என்றனர்.

புகார் அளிக்க:
தா.கார்த்திகேயன் ஆணையர், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, சென்னை - 600003. 044-25619300, 044-25384438 ,commissioner@chennaicorporation.gov.in

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gorgeous Marina ,shops ,beach , Shops occupy, garbage, marina, beach, solo project, people's request
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன்...