×

ஆதிதிராவிட நலத்துறை விடுதி, பள்ளி கட்டுமானம், பராமரிப்பு பணிகள் தாட்கோவிற்கு பதில் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுபாட்டின் கீழ் 1321 விடுதிகள், 1359 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு பணிக்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை நிதி ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. விடுதிகளில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் துர்நாற்றம் வீசுவதாக  கூறப்படுகிறது. அங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் பலர் வெளியூரில் இருந்து வந்து தங்கி படிக்கின்றனர். அவர்கள் துர்நாற்றத்தை தாங்கி கொண்டு வேறு வழியின்றி விடுதிகளில் தங்கி படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  மேலும், ஆதிதிராவிட பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை. அங்கு கழிப்பிடங்கள் இருந்தும் அவை பராமரிக்கப்படாததால் தற்போது அவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கியும், அதை பயன்படுத்தி முறையாக பணிகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்க தாட்கோவில் போதிய பொறியாளர்கள், ஊழியர்கள் இல்ைல. மேலும்,  ஆதிதிராவிட விடுதி, பள்ளிகளின் கட்டிடங்கள் தரமாக கட்டப்படுகிறதா என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்பம் வாய்ந்த பொறியாளர்கள் யாரும் இல்லை. இதனால், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் தரம் கேள்விக்குறி  ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதிதிராவிட நலத்துறை கட்டுபாட்டில் உள்ள பள்ளி, விடுதிகளில் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கான பணிகளையும், விடுதிகள், பள்ளிகளின் பராமரிப்பு பணிகளை தாட்கோவிற்கு பதிலாக  பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து இனிவருங்காலங்களில் ஆதிதிராவிட நலத்துறைக்கான புதிய பள்ளி, விடுதி கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் அனைத்தும் பொதுப்பணித்துறையின் மூலம்  மேற்கொள்ளப்படவுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும், கூறும் போது, தமிழக பொதுப்பணித்துறை மூலம் சுகாதாரத்துறை, பள்ளிகல்வித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுதுறைகளுக்கான கட்டிடம் கட்டுவது மற்றும் பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துறை சார்பில் கடந்த காலங்களில் ஆதிதிராவிட நலத்துறைக்கான பள்ளிகள், விடுதிகள் கட்டப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாட்கோ மூலம் பணிகள்  மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அங்கு பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், தொழில் நுட்ப ரீதியிலான பொறியாளர்கள் இல்லை. இதனால், கட்டிடங்களின் தரத்தில் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே தான்,  ஆதிதிராவிட விடுதிகள், பள்ளிகள் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maintenance Services ,Adi Dravida Welfare Department ,School Building ,Tadgos ,Tamil Nadu Government Order ,Public Works Department , Adi Dravida Welfare Department, School Building, Maintenance Works, PWD, TN Government
× RELATED கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் திறப்பு