×

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு : ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திந்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 5வது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 8 லட்சம் பேர் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான  பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பணிக்கு வராத சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிரான உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் அதிகாரம் என நீதிபதி கூறியுள்ளார்.

இதனிடையே ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கி, வரும் 28ம் தேதி பணியமர்த்தப்படுவர் என அறிவித்துள்ளது. எனினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திந்துள்ளார். ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், சாத்தியமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottiyan ,Palaniasamy ,meeting ,teachers , Chief Minister Palani samy,Minister Sengottaiyan, The Jacko-Geo Scramble,Consulting
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...