×

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைப்பு

வேலூர்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15நாள் நீதிமன்ற காவலில் 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்கக் கல்வியை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பணிக்குச் செல்லுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அரசுப்பள்ளிகள், அலுவலகங்கள் முடங்கின. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பணிக்கு வராத சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.7,500 சம்பளத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்காலிக ஆசிரியர்களின் ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக பள்ளிக்கல்வித்துறை உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில், வேலூரில் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 6 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 41 பேரை மாஜிஸ்திரேட் விடுத்து உத்தரவிட்டார்.  சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்குத் தொந்தரவு விளைவித்தல், சட்டவிரோதமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் 5 பெண்கள், 36 ஆண்கள் உட்பட 41 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : JAKARTO ,executives ,GUO ,Vellore Central Jail , Jakoto-jio, executives arrested, Vellore central prison, blocking
× RELATED திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகத்துறை நிர்வாகிகள் கூட்டம்