×

தலைமை செயலகத்தில் யாகம் வளர்த்த விவகாரம் - கிரிஜா வைத்தியநாதன், ஓபிஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் மனு

சென்னை: தலைமை செயலகத்தில் யாகம் வளர்த்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அட்வகேட் ஜெனரலிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த 20ம் ேததி தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தில் யாகம் வளர்க்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இது விதிமுறைகளுக்கு முரணானது என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து வந்தேன். பெரியாரின் கொள்கையை தீவிரமாக பின்பற்றக்கூடியவன். இந்தியாவில் அனைத்து மதத்தினரும் வாழலாம். நம் நாடு ஒரு மதசார்பற்ற நாடு.  அதனால் பிரிவினைகளுக்கு இடம் தரக்கூடிய மதம் சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் அரசு அலுவலகங்களில்  நடைபெறக்கூடாது. தமிழக அரசு 1968 ஏப்ரல் 29ல் இதுதொடர்பாக ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசு அலுவலகங்களில் கடவுளின் படங்கள், சிலைகள் வைக்கக்கூடாது.  பூஜை, வழிபாடு உள்ளிட்ட மத நடவடிக்கை எதுவும் நடைபெறக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 1991ல் ஆட்சிக்கு வந்த அரசில் இடம்பெற்ற அமைச்சர்கள் பலர் மூடநம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட சாமிகளின் புகைப்படங்களை தங்கள் அலுவலகத்தில் வைத்து வழிபட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தமிழக பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, 1993 நவம்பர் 15 மற்றும் டிசம்பர் 13 ஆகிய தேதிகளில் அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், அரசு அலுவலகங்கள் உள்ள வளாகத்துக்குள் வழிபாட்டு தலங்கள் எதுவும் இல்லை என்பதையும், வழிபாடுகள், மத நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதையும் உறுதி செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்கு கடந்த 1994 மே 4ம் தேதி கடிதம் எழுதியது. அதில், ‘அரசு அலுவலகங்களில் மத நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் பல அமைச்சர்கள் இந்த உத்தரவுகளை கண்டுகொள்ளாமல் அவர்களின் அலுவலகங்களில் சிலை மற்றும் புகைப்படங்களை வைத்து வழிபாடுகள் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகள் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் குஜராத் மாநில வழக்கிலும், தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கிலும் அரசு அலுவலகங்களில் மத வழிபாடு கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அலுவலகத்தில் கடந்த 20ம் ேததி யாகம் நடத்தியுள்ளார்.துணை முதல்வரின் இந்த நடவடிக்கையை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தடுக்கவில்லை. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை இருவரும்  அவமதித்துள்ளதால் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை நேற்று அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் விசாரணைக்கு எடுத்தார். அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.துரைசாமி ஆஜராகி, புகார் தொடர்பாக விளக்கமளித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அட்வகேட் ஜெனரல் தள்ளிவைத்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Girija Vaidyanathan , Chief Secretariat, Yagam, Deputy Chief Minister O.Panniriselvam, Girija Vaidyanathan,
× RELATED தீர்ப்பாய உறுப்பினர்களாக...