×

வீடியோகான் வங்கி கடன் முறைகேடு விவகாரம் : ஐசிஐசிஐ அதிகாரி சந்தா கோச்சார் மீது சிபிஐ வழக்குப்பதிவு

மும்பை : விதிகளை மீறி வீடியோகான் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கிய புகாரில், ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயலாளர் சந்தா கோச்சார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலாளராக சந்தா கோச்சார் இருந்தபோது வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி சார்பில் 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதையடுத்து சந்தா கோச்சார் அவரது கணவரின் தீபக் கோச்சார் நடத்தி வந்த நுபவர் நிறுவனத்தில் முதலீடு செய்த வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் சலுகைகள் காட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் சந்தா கோச்சார் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் அளித்துள்ளதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. விசாரணை முடியும் வரை சந்தா கோச்சாருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயும் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் வீடியோகான், நுபவர் நிறுவனங்களின் மும்பை அலுகலங்களில் இன்று திடீரென சிபிஐ சோதனை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் கடன் சலுகை தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முறைகேடாக வங்கி கடன் வழங்கிய விவகாரத்தில் வீடியோகான், தீபக் கோச்சாரின் நுபவர் நிறுவனங்கள் மற்றும் ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயலாளர் சந்தா கோச்சார் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தனது முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியிருந்த நிலையில், இன்று சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து வங்கி மோசடி வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Videocon ,Subha Kochhar ,CBI ,ICICI , Videocon, Credit Abuse, ICICI, Chanda Kochhar, CBI
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...