×

தைப்பூசத் திருவிழா....அரோகரா கோஷம் முழங்க அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்தனர்

பழனி: தைப்பூசத் திருவிழாவையொட்டி முருகன் பெருமானின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட கோவில்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று இரவும், நாளை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது. பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் காவடிகளை ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

மேலும் கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணி அளவில் முதல் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. பின்னர் 7 திரைகளை விலக்கி காட்டப்பட்ட இந்த ஜோதியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைபூசத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தைப்பூசத்தையொட்டி, நெல்லை, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து காவடி எடுத்து, வேல்குத்தி பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலேயே குடுபத்துடன் வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர். பினாங்கு, ஈப்போ ஆகிய இடங்களிலும், சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festivals ,devotees ,shrine ,house , Thaipusat ,Aurochha slogan , devotees gathered, shrine
× RELATED சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்