×

வேலூர் அரசு மருத்துவமனையில் லாரி டிரைவர் மனைவிக்கு பிறந்த குழந்தை மாற்றமா?

வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் லாரி டிரைவர் மனைவிக்கு பிறந்த குழந்தை மாற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் கஸ்பா பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குசேலன்(30), லாரி டிரைவர். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கர்ப்பமான பாரதி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மதியம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாக கூறி மதியம் 1.50 மணியளவில் பாரதியின் உறவினர்களிடம் குழந்தையை கொண்டு வந்து காட்டி உள்ளனர்.

இந்நிலையில், அன்று இரவு 7.30 மணியளவில், குசேலன்- பாரதி தரப்பினரிடம் மருத்துவமனை ஊழியர்கள் சென்று, ‘உங்களுக்கு பெண் குழந்தைதான் பிறந்துள்ளது. மதியம் ஊழியர்கள் குழந்தையை தெரியாமல் மாற்றி காட்டி விட்டனர்’ என்று கூறி வேறு குழந்தையை காட்டியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த குசேலன் தரப்பினர் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனை தரப்பில் டிஎன்ஏ பரிசோதனை செய்து உங்கள் சந்தேகம் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, ‘சில சமயம் அவசரத்தில் குழந்தையை மாற்றி எடுத்து சென்று காட்டி விடுவதுண்டு.  இது பெரிய விஷயம் இல்லை. அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் இங்குள்ள தனியார் மருத்துவமனையிலேயே டிஎன்ஏ டெஸ்ட் செய்து சந்தேகம் களையப்படும் என்று கூறியுள்ளோம். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : baby ,lorry driver ,Vellore Government Hospital , Vellore Government Hospital, Newborn Child, Change
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி