×

தமிழகத்தில் இரவு முழுவதும் தீவிர சோதனை டயர், பிளாஸ்டிக் எரிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை

சென்னை: போகிப்பண்டிகையையொட்டி  டயர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம்  முழுவதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். தற்போது  அதிகரித்து வரும் வாகனப்பெருக்கத்தால், காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது.  இப்படியிருக்கும் நிலையில் சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில்  போகிப்பண்டிகையை காரணம் காட்டி பழைய பொருட்கள்  எரிக்கப்படுவதால், மேலும்  காற்று மாசுபாடு அதிகரிக்கிறது.குறிப்பாக நகரப்பகுதிகளில் பழைய  பொருட்கள் எரிக்கப்படும் போது வெளியாகும் கரும்புகை வெளியேறுவதில்  காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு அருகருகே வீடுகள் கட்டப்பட்டிருப்பதே  காரணம். இதனால் நகரங்களில்  வசிக்கும் மக்கள் கடுமையாக  பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் அதிகமான  பாதிப்பு உள்ளது. இதனால் போகிப்பண்டிகையின் ேபாது பழைய பொருட்களை எரிப்போரை  கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன்   விளைவாக இவ்வாண்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரிப்போர் மீது  வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு   பிரசாரம் செய்யப்பட்டது. அப்போது, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு  தரப்பினருக்கும், போகி பண்டியின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து  காற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை  வழங்கப்பட்டது. இந்நிலையில்,  இன்று போகி கொண்டாடப்படுவதால், நள்ளிரவு முதலே பழைய பொருட்கள்  எரிக்கப்படும். இதைக்கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கும் வகையில் காவல்துறையோடு இணைந்து, 30  ரோந்து வாகனங்கள் மூலம்  சென்னை மாநகர முழுவதும் நள்ளிவு முதல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதே  போன்று தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனி குழு அமைத்தும், மற்ற மாவட்ட  பகுதிகளில் மாவட்ட கலெக்டர்  தலைமையில் போலீசார் ரோந்து மூலம் கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு  வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , extreme, Tamil Nadu, Tire, plastic char, Control
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...