×

நாகர்கோவில் அருகே நள்ளிரவில் திடீர் கடல் சீற்றம்: ராட்சத அலையில் சிக்கி 10 படகுகள் உடைந்தன

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கடல் சீற்றத்தால் 10க்கும் மேற்பட்ட படகுகள் உடைந்தன. மேலும் பல படகுகள் கடலுக்குள் மூழ்கியதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் கடற்கரை கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் உள்ளனர். இவர்கள் நாட்டு படகுகள் மூலம் அதிகாலையில் மீன்பிடிக்க சென்று விட்டு பின்னர் கரை திரும்புவது வழக்கம். தனது படகுகளை கடற்கரை பகுதியில் மீனவர்கள் நிறுத்தி இருப்பார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பள்ளம் பகுதியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகளால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஒன்றோடொன்று மோதின. இதில் படகுகள் உடைந்தன. மேலும் 20க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளை கடல் அலை இழுத்து சென்றது.

இது பற்றி அறிந்ததும் மீனவர்கள் உடனடியாக வந்து எஞ்சி உள்ள படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக இந்த காலங்களில் கடல் சீற்றமாக காணப்படும் என்றாலும் நேற்றிரவு திடீரென எதிர்பாராத வகையில் அதிகளவில் சீற்றம் காணப்பட்டதால் படகுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கடல் அலை சீற்றத்துடன் இருந்ததால், பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆஸ்டின் எம்.எல்.ஏ. இன்று காலை பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார். பங்கு தந்தை சூசை ஆண்டனி உள்ளிட்டோர்  உடன் சென்றனர். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்டின் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagercoil , Nagercoil,giant wave
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது