×

நாடாளுமன்ற தேர்தல்: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியை தொடர்ந்து காங்கிரஸ் இன்று முடிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணியை தொடர்ந்து காங்கிரஸ் தங்கள் முடிவை இன்று அறிவிக்கவுள்ளது. மக்களவை தேர்தல் அறிவிப்பு, அடுத்த மாத  இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக  ஈடுபட்டுள்ளன. பாஜ.வுக்கு எதிராக பலமான  கூட்டணியை அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாநில கட்சிகளுடனும் பேசி வருகிறது. இதேபோல் தெலங்கானா ராஷ்டிரிய சமீதிகட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான  சந்திரசேகர ராவும் கூட்டணி முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து பலகட்டமாக  பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

 ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, காங்கிரசை கழற்றிவிட்டு, பகுஜன் சமாஜூம், சமாஜ்வாடியும் திடீரென நெருங்கின.  சமீபத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ்  கட்சித் தலைவர் மாயாவதியும் டெல்லியில் சந்தித்து பேசினர். இதையடுத்து, இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முடிவு செய்தன.இதற்கான அறிவிப்பு, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டாக  அறிக்கை வெளியிட்டனர். அவர்கள் அளித்த  பேட்டியில் கூறியதாவது:எங்களின் இன்றைய அறிவிப்பு, டெல்லியில் இருக்கும் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கும். மக்களவை தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். பாஜ.வுக்கு எதிராகவும்,  நாட்டின் நலனுக்காகவும்  நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம். 21ம் நூற்றாண்டின் மிகச்சிறப்பான கூட்டணி இது. எங்களுக்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது. இதனால் மக்களவை தேர்தலில் நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

நாங்கள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். ஆனால், அமேதி மற்றும்  ரேபரேலியில் மட்டும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வறுமை,  வேலையின்மை மற்றும்  ஊழல்கள் பெருகியதால்தான், அந்த கட்சியை நாங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த இந்த கட்சிகள் திடீரென தனிக்கூட்டணியை உருவாக்கி இருப்பது, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு  செய்வதற்காக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் இன்று அவசரமாக நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் ராஜ்பப்பர், மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் மாநில தலைவர்கள்  பங்கேற்கின்றனர். இதில் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,coalition ,Uttar Pradesh ,Samajwadi-Bahujan Samaj , Parliamentary election, Uttar Pradesh, Samajwadi, Bahujan Samaj, coalition, Congress
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால்...