திருவனந்தபுரம்: சபரிமலையில் மகர விளக்கு பூஜையையொட்டி நடக்கும் திருவாபரண ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்களுக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் பந்தளம் அரண்மனை நிர்வாகிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சபரிமலையில் 2 இளம் பெண்கள் தரிசனம் செய்ததை தொடர்ந்து கேரளாவில் பயங்கர வன்முறை வெடித்தது. 5 நாட்கள் வரை கேரளா முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் வருகிற 14 ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்க உள்ள நிலையில் மேலும் பல இளம் பெண்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதை எதிர்ப்போம் என இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மகரவிளக்கு பூஜையையொட்டி ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இந்த திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும். பந்தளம் மன்னர் பிரதிநிதி தலைமையில் தான் இந்த ஊர்வலம் நடக்கும். இந்த ஊர்வலத்தில் அரண்மனை பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்வார்கள்.
சபரிமலையில் இளம் பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு ெதரிவித்து பந்தளம் அரண்மனை குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால் கேரள அரசுக்கும், பந்தளம் குடும்பத்துக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. திருவாபரண ஊர்வலத்துக்கு பாதுகாப்பு கேட்டு பந்தளம் குடும்பம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் திருவாபரண ஊர்வலத்தில் செல்வோருக்கு போலீசார் திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் யாரும் திருவாபரண ஊர்வலத்தில் கலந்துகொள்ளக்கூடாது என பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு பந்தளம் அரண்மனை குடும்பத்தினருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இன்று மதியம் 1 மணியளவில் திருவாபரண ஊர்வலம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. போலீசாரின் திடீர் உத்தரவால் பந்தளம் அரண்மனையை சேர்ந்த முக்கியஸ்தர்கள் யாருக்கும் ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பந்தளம் அரண்மனை நிர்வாகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கம்போல் திருவாபரண ஊர்வலத்தில் கலந்துகொள்வோர் பட்டியலை பந்தளம் அரண்மனை வெளியிட்டுள்ளது. அதில் கலந்துகொள்பவர்களை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு திருவாபரண ஊர்வலம் அமைதியாக நடைபெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கலவர வழக்கில் மகன் கைது : பாஜ பிரமுகர் தற்கொலை
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள தேவலக்கரையை சேர்ந்தவர் மோகனன்பிள்ளை (65). பாஜ தொண்டர். இவரது மகன் மனோஜ்குமார் (28). இவர் பாஜவின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா உறுப்பினராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சபரிமலையில் இளம் பெண்கள் சென்றதால் கலவரம் வெடித்தது. கொல்லத்தில் நடந்த கலவரத்தில் மனோஜ்குமார் அதே பகுதியை சேர்ந்த அனிஷ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மனோஜ்குமார் மீது கொல்லம் மாவட்டம் சவரா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மனோஜ்குமார் தலைமறைவாக இருந்ததால் போலீசார் அவரை ேதடி அவரது வீட்டுக்கு சென்றனர். இதனால் மோகனன்பிள்ளை மனம் உடைந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோஜ்குமார் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகனை கைது செய்ததால் மனம் உடைந்த மோகனன்பிள்ளை ேநற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து கொல்லம் தெற்குபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
50 ஆயிரம் பெண்களை சபரிமலைக்கு அழைத்து வர முடியும் -அமைச்சர் சர்ச்சை பேச்சு
கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி கொட்டாரக்கரையில் நடந்த விழாவில் பேசியதாவது: மார்க்சிஸ்ட் கட்சி நினைத்தால் 50 ஆயிரம் இளம் பெண்களை வேண்டுமானாலும் இருமுடி கட்டுடன் சபரிமலைக்கு அழைத்து செல்ல முடியும். அதை தடுக்க யாராலும் முடியாது. ஆனால் அது எங்கள் பணி அல்ல. தரிசனம் செய்ய விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் சபரிமலைக்கு செல்லலாம். இதுவரை நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் தரிசனத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் இந்த விவரம் எல்லாம் பாஜவுக்கு தெரியாது. இனியும் இளம் பெண்கள் தரிசனத்துக்கு செல்வார்கள். ஆனால் அதை தடுக்க யாராலும் முடியாது. இவ்வாறு அவர் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி