×

சென்னையில் ரகசிய கேமரா மூலம் ஆபாச படம் பெண்கள் விடுதிகளை முறைப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்த கோரி வழக்கு: சமூக நலத்துறை செயலருக்கு நோட்டீஸ்

மதுரை:  மதுரை, மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கல்வி மற்றும் வேலை வாய்ப்பு காரணங்களுக்காக பெண்கள் வெளியூர்களில் தங்குகின்றனர். இதுபோன்ற பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழங்குப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்த சமூக நலத்துறை அரசாணையில், விடுதி மற்றும் இல்லங்களின் கட்டிடத்தின் உறுதி மற்றும் சுகாதாரம் குறித்து பொதுப்பணித்துறையிடம் சான்று பெற வேண்டும். பாதுகாப்பு வசதிகளுக்கு தீயணைப்புத்துறையிடம் சான்றிதழ் பெற்று, மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சான்றுகள் உறுதி செய்யப்பட்ட பிறகே பெண்கள் இல்லம் மற்றும் விடுதிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் இவற்றை பின்பற்றாமல் லஞ்சம் பெற்று அதிகாரிகள் விடுதிகளுக்கு அனுமதி வழங்குகின்றனர். போதுமான கட்டமைப்பே இல்லாமல் பல விடுதிகள் நடக்கின்றன.  ெசன்னை ஆதம்பாக்கத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட விடுதியில் ரகசிய கேமராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படமெடுத்த சம்பவமும் அரங்கேறியது. பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை முறையாக அமல்படுத்தவும், முறைகேட்டிற்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், சமூக நலத்துறை செயலர் மற்றும் தீயணைப்புத்துறை இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜன.23க்கு தள்ளி வைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : secret camera,Chennai, Establish ,women's hostels
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...