×

கொள்ளிடம் அருகே நெட்டித்தக்கை மாலை தயாரிப்பு தீவிரம் : வரி உயர்வால் விலை உயர வாய்ப்பு

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே நெட்டித்தக்கை மாலை செய்து ஒரு கிராமமே பிழைப்பு நடத்தி வருகிறது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 66 வீடுகளைச் சேர்ந்த 200 குடும்பங்களச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் ஏழை தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள் விவசாய தொழிலை மட்டுமே நம்பி பிழைத்து வருகின்றனர். வருடத்தில் பெரும்பாலான நாட்களில் வேலையின்றி வாழ்ந்து வரும் இந்த ஊர் மக்கள் பொங்கல் பண்டிகை நெருங்கினால் சற்று மகிழ்ச்சி அடைகின்றனர். வருடந்தோறும் நவம்பர் டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் வேறுஎந்த வேலைக்கும் செல்வது இல்லை. நெட்டித்தக்கை மாலை செய்யும் தொழில் ஒன்றை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

நெட்டித்தக்கை செய்ய பயன்படும் தக்கைச் செடி பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏரிகளில் மட்டுமே காணப்படுவதால் ஆண்கள் 4 அல்லது 5 குழுக்களாகப் பிரிந்து  சென்று லாரிகள் மூலம் நெட்டித்தக்கை செடிகளைக் கொண்டு வருகின்றனர். எடுத்து வந்தவுடன் இச்செடியின் மேல் தோல் நீக்கப்படுகிறது. தோல் சீவப்பட்ட தக்கைகள் ஒரு நாள் மட்டுமே காய்ந்தால் போதும் உடனே துண்டு துண்டுகளாக நறுக்கப்படுகிறது. பூவைப் போலவும் நறுக்கி அழகுபடுத்தப்படுகிறது. பின்னர் சாயம் தோய்க்கபட்டு வண்ண நிறங்களாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு நெட்டித்தக்கை மாலைகள் தயார் செய்யப்படுகிறது. குழந்தைகள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் முழுமையாக மூன்று மாதங்களுக்கு நெட்டித்தக்கை மாலை செய்யும் தொழிலில் தீவிரமாக  ஈடுபட்டு மாலைகள் தயார் செய்தவுடன் சிதம்பரம், கடலூர், சீர்காழி, பொறையாறு, திருவாரூர், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்கள் நேரில் வந்து கொள்முதல் செய்கின்றனர்.

இங்குள்ளவர்களும் இரு சக்கர வாகனங்களில் எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். வருடத்திற்கு 10 முதல் 15 மொத்த விற்பனையாளர்கள் மேலவல்லம் கிராமத்திற்கு நேரில் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒரு மொத்த கிராமமே இந்த தொழிலில் ஈடுபட்டு பொங்கல் முதல் நாளிலிருந்து மாட்டுப்பொங்கல் வரை தயார் செய்யப்பட்ட அனைத்து நெட்டித்தக்கை மாலைகளின் பெரும்பகுதி விற்பனை செய்து விடுகின்றனர். இப்படி கிராமமே இத்தொழிலில் ஈடுபட்டாலும் இவர்கள் சாப்பாட்டிற்கும் பிழைப்புக்கும் பொங்கல் விழா கொண்டாடுவதற்கும், வாங்கிய கடனை திரும்ப அடைப்பதற்கும்  மட்டுமே இந்த மாலைகள் மூலம் கிடைக்கும் வருமானம் பயன்படுகிறது. ஆனால் லாபம் இல்லை என்கின்றனர். இது குறித்து இத்தொழிலில் ஈடுபட்டு வரும் சம்மந்தம் என்பவர் கூறுகையில், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களின் பாரம்பரியமான தொழிலாக நெட்டித்தக்கை மாலை தொழில் இருந்து வருகிறது. அனைவரும் ஏழைகளாக உள்ளதால் மாலை செய்வதற்கு எங்களில் யாரிடமும் முதலீடு இல்லை.

எனவே இக்கிராமத்தை சேர்ந்த அனைத்து குடும்பத்தினரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தனியார்களிடமிருந்து வட்டிக்கு பணம் வாங்கி இத்தொழிலில் ஈடுபட்டு பொங்கல் முடிந்தவுடன் வட்டியோடு முதலையும் சேர்த்து கொடுத்து விடுகிறோம். வருடந்தோறும் நாங்கள் உரிய வட்டியுடன் உரிய நேரத்தில் திருப்பி கொடுத்து விடுவதால் நெட்டித்தக்கை மாலை செய்ய கடன் கொடுக்க தாராளமாக முன்வருகின்றனர். கால்நடைகளுக்கு இந்த நெட்டித்தக்கை மாலை அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளதால் கால்நடை வளர்ப்போர் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ஜி.எஸ்.டி வரியால் சாயப்பவுடர் ரூ 1500 லிருந்து 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் மாலை விலையையும் உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 1 குடும்பத்திற்கு 3 ஆயிரம் மாலைகள் முதல் 5 ஆயிரம் மாலைகள் வரை உற்பத்தி செய்கிறோம். தக்கைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு வரும்போது போலிசாரின் கெடுபிடியால் சிரமப்பட நேரிடுகிறது. உற்பத்தி செய்த மாலைகள் விற்பனையாகாவிட்டால் அப்படியே நஷ்டமாகி விடும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nagai,kollidam,nettithakkai malai
× RELATED நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில்...