×

பிளாஸ்டிக் மீதான தடையை எதிர்த்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் முற்றுகை: கோட்டையை நோக்கி பேரணியாக சென்றபோது கைது

சென்னை: பிளாஸ்டிக் தடையை எதிர்த்து கோட்டையை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் மற்றும்  பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை போலீசார் கைது செய்தனர். ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 ஜனவரி முதல் தமிழகத்தில் தடை விதிப்பதாக கடந்த ஜூன் 5ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி 110 ன் கீழ் அறிவித்தார். இந்நிலையில் மத்திய அரசு இந்திய அளவில் பிளாஸ்டிக் தடை தொடர்பான கொள்கை முடிவுகளை வெளியிடும் வரை இத்தடையை நிறுத்தி வைக்க வேண்டும். 10 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தடை உத்தரவை எதிர்த்தும்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நேற்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான வணிகர்கள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கலைவாணர் அரங்கம் அருகில் இருந்து ஊர்வலமாக கோட்டையை முற்றுகையிட சென்றனர். சேப்பாக்கம் விருந்திருந்தினர் மாளிகை அருகே வணிகர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் புதுப்பேட்டை சமூக நலக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக விக்கிரமராஜா கூறியதாவது:தமிழக அரசு கடந்த 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக 14 மாற்றுப் பொருட்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கே 14 வகையான மாற்றுப்பொருட்கள் என்னென்ன என்று தெரியவில்லை. எனவே பிளாஸ்டிக் தடை தொடர்பாக தமிழகத்தில் தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். என்னென்ன மாற்றுப் பொருட்கள் என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். அவை முழுமையான அளவில் தயார் செய்யப்பட்டு கடைகளுக்கு வினியோகம் செய்த பின்னரே தடையை அமல்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் தடையென்ற அறிவிப்பை வைத்து அரசு அதிகாரிகள் சிறு, குறு தொழிலாளர்களை மிகவும் துன்புறுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களின் உணவுப்பொருட்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால் சிறு, குறு தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருட்ளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது உள்நாட்டு வியாபாரிகளை நசுக்கும் செயல். இந்த தடையின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் அரசை இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் முற்றுகை போராட்டம் நடத்துகிறோம். எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து முதல்வர் இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், பொங்கல் பண்டிகைக்கு பிறகு, தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.இந்த போராட்டத்தில் பொதுச் செயலாளர் ேகாவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா, மண்டல தலைவர் ஜோதிலிங்கம், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி மற்றும் ஏராளமான வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fortress ,rally , Thousands , businessmen ,plastics, arrest ,fortress
× RELATED அர்ஜெண்டினாவில்...