×

பென்னாகரம் அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

தர்மபுரி: பென்னாகரம் அருகே நத்தஹள்ளியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர், தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளையினர் மதன்குமார், விஜய், கணேசன் ஆகியோர், பென்னாகரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் நத்தஹள்ளி பகுதியில், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது: இக்கல்வட்டங்கள் அனைத்தும் அளவில் பெரியதாகவே அமைந்துள்ளதால், சுமார் 3000 முதல் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம். இதில் ஒரு கல் வட்டத்தின் சுற்றளவு சுமார் 183 அடி, அதாவது 50 மீட்டர் ஆகும்.

இதன் குறுக்கு வட்டம் 73 அடியாக உள்ளது. இவ்வளவு பெரிய கல்வட்டம் இதுவரை கண்டறியப்படவில்லை. கல் வட்டங்கள் மிகப்பெரியதாக அமைந்துள்ளதால், இப்பகுதியை சேர்ந்த குறுநில மன்னர்கள் அல்லது நிலச்சுவான்தார்கள் ஆகியோர் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம். இதன் அருகில் உள்ள மற்ற கல்வட்டங்கள் சராசரியாக 160லிருந்து 170 இடைப்பட்ட அடிகளில் சுற்றுவட்டங்களை கொண்டுள்ளன. மேலும், அடுத்தடுத்து பெரிய கல் வட்டங்கள் காணப்படுவதால், இவை அவர்களின் வாரிசுகளுக்கானதாக இருக்கக் கூடும். நத்தஹள்ளி பண்டைய காலத்திலேயே, பெரிய குடியிருப்பாக வளர்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

கல்வட்டங்கள் புதைகுழிகளாக மட்டுமல்லாமல், அக்காலத்தைய சமூக, பொருளாதார, அரசியல், கட்டிடக்கலை வளர்ச்சி போன்ற பல்வேறு செய்திகளை நமக்கு உணர்த்துபவையாக உள்ளது. கல் வட்டங்கள் அதனுடைய அமைப்பு ஆகியவை, அக்கால மக்களின் தொழில்நுட்பங்கள் குறித்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இக்குழிகளின் உள்பகுதியில் நான்கு கற்பலகைகள் வைத்து, மேலே மூடுகல் எனப்படும் 5 டன் எடைக்கு குறையாத கல்லால் மூடப்பட்டிருப்பதால் இம்மக்கள், இரும்பு காலத்தின் ஆரம்ப கட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என்பது தெரியவருகிறது. இத்தொழில்நுட்பங்கள் ஆய்வுக்குட்பட்டவை. இக்கல்வட்டங்களில் சில, நில சீர்திருத்தங்களுக்காக சரிபடுத்தப்பட்டாலும், இன்றளவும் பாதுகாக்கப்படுவது இம்மக்களின் பண்டைய அறிவிற்கு சிறந்த சான்றாகும். இவற்றை பாதுகாப்பதன் மூலம், இப்பகுதியினுடைய தொன்மையையும் இவற்றினுடைய வரலாற்றையும் அறிந்து கொள்ள உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pennagakaram, academics, discovery
× RELATED கோவை வால்பாறை அருகே எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை!!