×

உணவு பொருட்களை செய்தித்தாள்களில் விற்றால் அபராதம்: உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை

புதுடெல்லி: உணவு பொருட்களை செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. செய்தித்தாள் உள்ளிட்ட அச்சடிக்கப்பட்ட காகிதங்களில், உணவு பண்டங்களை கட்டுதல், மடித்தல் மற்றும் காகிதத்தின் மீது வைத்து கொடுப்பது, உணவின் பாதுகாப்பு தன்மைக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவை தயார் செய்திருந்தாலும், உணவு பண்டத்தை அச்சு காகிதத்தில் மடித்து கொடுப்பதால், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது.

இந்த நிலையில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் புதிய வழிமுறைகளை வகுக்க முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக உணவு பொருட்களை செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யக் கூடாது என உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு வர்த்தக நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேக்கிங் செய்யப்படும்போது செய்தித்தாள்கள் உள்ளிட்ட பொருட்களில் உள்ள கன உலோகங்கள் மற்றும் வேதி பொருட்கள், உணவு பொருட்களில் கலப்பதாக இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய 2 ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் 13.4 சதவீதம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணைய சிஇஓ பவன் அகர்வால், புதிய பேக்கிங் வழிகாட்டுதல்களை பின்பற்ற 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், உணவுப் பொருள் பேக்கிங் விதிமுறைகளை கடைபிடிக்காத மற்றும் சட்ட விரோதமாக உதிரியாக பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கேரி பைகள், மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் உணவு பொருட்களை விற்றாலோ அல்லது பேக்கிங் செய்து வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : newspapers ,Food Safety Quality Control Commission , Food Products, Newspaper, Penalty, Food Safety Quality Control Commission
× RELATED ஜோதிட ரகசியங்கள்