×

ஜோதிட ரகசியங்கள்

ராசி பலன்கள் எப்படி கணிக்கப்படுகிறது?

எல்லாப் பத்திரிகைகளும் வாரா வாரம் ராசி பலன் வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகளிலும் ராசி பலன் பிரத்தியேகமாகச் சொல்லக்கூடிய ஜோதிடர்கள் இருக்கிறார்கள். அதை ஆர்வமாக எல்லோரும் பார்ப்பதால்தான் தொடர்ந்து வெளியிடுகிறார்கள். ஆனால், இந்த ராசிபலன், சிலருக்கு 100% அப்படியே நடக்கிறது. சிலருக்கு பாதி நடக்கிறது; பாதி நடக்கவில்லை. சிலருக்கு முழுமையாக நடக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.ராசிபலன் எழுதுபவர்கள், அந்த வாரம் அல்லது அந்த மாதத்திற்கான கோள்சாரம் எனப்படும் கோசார நிலையை வைத்து, அந்தந்த ராசிக்கு உரிய பலனை எழுதுகின்றார்கள். ஒரு பலன், நூறு சதவீதம் நடப்பதை நிர்ணயம் செய்வது (Finalaisation) ஜாதகம் அல்ல, தசாபுத்திகள் அல்ல, கோள் சாரம்தான். ஒருவருக்கு நன்மையோ தீமையோ இப்படி நடக்கும் என்பதை ஜாதகம் எடுத்துக்காட்டும். எப்போது நடக்கும் என்பதை தோராயமாக தசா புத்திகள் எடுத்துச் சொல்லும். இன்னும் துல்லியமாக அது நடக்கும் காலத்தை சொல்வதுதான் கோசாரம். அதுவும் சந்திரனுடைய நிலையை கவனித்தால், இன்னும் துல்லியமாக குறிப்பிட்ட பலன் நடப்பதை உறுதி செய்ய முடியும். இதற்கென்று உள்ள சாத்திரம்தான் சந்திரநாடி. காரணம், ஒன்பது கோள்களிலே அதிவேகமாக மாறிக்கொண்டே இருப்பது சந்திரன்தான். நாள் பலனை எழுதுபவர்கள், சந்திரனை வைத்துக் கொண்டுதான் எழுதமுடியும். எனவே, ராசிபலன்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை புரிந்து கொண்டால், அது எந்த அளவு நடக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, பலம் மிகுந்த ஜாதகத்துக்கு யோகதசை நடக்கும் பொழுது கோள்சாரம் சரியாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் ராசிபலனில் சொல்லப்பட்ட தீமையான பலன்கள் நடக்காது. உதாரணமாக, விபத்து ஏற்படும் என்று சொன்னால், ஏதோ சிறிய அளவில் கால் விரலை இடித்துக்கொள்வார்கள் அல்லது தலையை எங்கேயாவது இடித்துக் கொண்டு கொஞ்ச நேரத்தில் சரியாகப் போய்விடும்.

அதே நேரத்தில் கோள்சாரம் சரியாக இருந்து, அஷ்டம திசையைப் போல கஷ்டதிசை நடந்துகொண்டிருந்தால், தீமைகள் குறையுமே தவிர பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. ஒருவருக்கு கஷ்டதிசை நடந்து, கோள்சாரமும் கை கொடுக்கவில்லை என்று சொன்னால், ராசிபலன்களில் சொல்லப்பட்ட எதிர்மறை விஷயம் அப்படியே நடந்துவிடும்.வாசகர்களில் இந்த மூன்று நிலையிலும் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதால்தான் சிலருக்கு நடக்கிறது. சிலருக்கு பாதி நடக்கிறது. சிலருக்கு சுத்தமாக நடக்கவில்லை. உதாரணமாக, மிதுனராசிக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களாக அஷ்டம சனி ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. எனக்குத் தெரிந்த பலருக்கு வருமானம் குறைந்தது. வேலையில் இருந்து நீங்கினார்கள். குடும்பத்தில் பிரச்னைகள் ஒன்று மாற்றி ஒன்று வந்து நிம்மதி இல்லாமல் இருந்தார்கள். உடல் நிலை மோசம் அடைந்தது. அதிலும் 6-க்குரிய செவ்வாய் திசை நடந்தவர்கள் சில விபத்துகளில் சிக்கினார்கள். இப்பொழுது, மிதுன ராசிக்கு அஷ்டம சனி நீங்கிவிட்டது. குரு லாபஸ்தானத்திற்கு வந்துவிட்டார். சனியும் பாக்கியஸ்தானத்துக்கு வந்துவிட்டார். அவர்களுக்கு இப்பொழுது சுப பலன்கள்தான் பெரும்பாலும் நடக்க வேண்டும். ஆனால், ஒரு சில மிதுன ராசிக்காரர்களுக்கு இன்னும் சென்ற வருடக்கஷ்டங்கள் போகவில்லை. என்னிடத்தில் ஒரு பெரியவர் கேட்டார். “மிதுன ராசிக்கு சுப பலன்கள் போட்டு இருக்கிறது. ஆனால் எனக்கு நடக்கவில்லையே” என்றார். நான் கேட்டேன்.

“உங்களுக்கு வயது என்ன?” அவருக்கு வயது 84. நான் சொன்னேன்.“ என்னதான் யோக ஜாதகமாக இருந்தாலும், 84 வயதுக்குரிய உடல் ஆரோக்கியம்தான் இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த திருமணத்தடை நீங்கும் என்பது பலனாக இருந்தால், அது எப்படி உங்களுக்குப் பொருந்தும்? ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும் என்றாலும்கூட, வயது மூப்பு காரணமாக உடம்பில் இருக்கக்கூடிய பல கால நோய்கள் (chronic) இருக்கத்தானே செய்யும். அதோடு, தனிப்பட்ட ஜாதகத்தின் விசேஷங்களும் சேர்ந்துகொள்ளும் பொழுது, பொதுவான மிதுன ராசி சுப பலன்கள் உங்களுக்கு 100% சரியாக இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இது ராசி பலன்களின் குறை அல்ல. ராசி பலன்களைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் குறைதான். அதோடு மிதுன ராசிக் காரர்களுக்கு சுகஸ்தானத்தில் சர்ப்ப கிரகமான கேது அமர்ந்திருக்கிறார். எனவே மற்ற கிரகங்கள் உங்களுக்கு நன்மை செய்தாலும், கேது தீமை செய்யும் அமைப்பில் ஜாதகத்தில் இருக்கிறார். அவர் பலவீனம் அடைந்த ஜாதகர்களுக்கு சுகஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால், சுகம் கெடத்தானே செய்யும் என்றேன்.இதுதான் எல்லா ராசிக் காரர்களுக்கும். எனவே, ராசி பலனை எந்த அளவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமோ அந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். அதோடு அதை மேலோட்டமாகவே பார்க்க வேண்டும். நாம் இந்த வாரம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமே என்கின்ற வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் தவிர, 100 சதவீதம் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். காரணம், எட்டுக் கோடி தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், ஒரு 75 லட்சம் பேராவது மிதுன ராசியில் இருப்பார்கள். அந்த 75 லட்சம் பேர்களுக்கும், வார ராசிபலன் அப்படியே நடக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான்