×

சொன்னதை செய்தாரா உங்கள் (கிருஷ்ணகிரி) எம்.பி? : அசோக்குமார்

தமிழக-கர்நாடக  எல்லையான கிருஷ்ணகிரி, தமிழகத்தில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாவட்டம்.  மூதறிஞர் ராஜாஜி பிறந்த ஊர். அவரது மகன் நரசிம்மனை எதிர்த்து பிரபல  விஞ்ஞானி ஜி.டி.நாயுடு போட்டியிட்ட தொகுதி. ஆண்டுதோறும், ‘அகில இந்திய  மாங்கனி கண்காட்சி’ இங்கு நடப்பது பெருமைக்குரியது. இங்குள்ள தளி,  ‘லிட்டில் இங்கிலாந்து’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. இப்படி  பல்வேறு தனித்துவங்கள் நிறைந்த கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியின் எம்பி,  அதிமுகவை சேர்ந்த அசோக்குமார். இவர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள்  என்ன? அவற்றை நிறைவேற்றினாரா? அலசுகிறது இந்தப்பகுதி.

நான் எம்.பி.யானால்...!
2014 தேர்தலில் அசோக் குமார் கொடுத்த வாக்குறுதிகள் பல; அவற்றில் ஒரு சில:
n கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்ைட
ரயில்வே பாதை
n கிருஷ்ணகிரியில் அரசு சார்பில்
மருத்துவக்கல்லூரி
n மாவட்டத்தில் அனைத்து
ஏரிகளுக்கும் இணைப்பு வாய்க்கால்
n பர்கூரில் ஜவுளிப் பூங்கா
n ஓசூரில் தொழிலாளர் நல அலுவலகம்,
ஐடி பார்க்
n ஓசூரில் மலர் ஏற்றுமதிக்கான விமான சேவை
n சாம்பல்பட்டியில் உயர்மட்ட மேம்பாலம்

பிரம்மச்சாரி
பிறப்பிடம்    கிருஷ்ணகிரி
கல்வி    எஸ்.எஸ்.எல்.சி.
வயது    65
தந்தை    கிருஷ்ண மூர்த்தி
தாயார்    யசோதம்மாள்
    திருமணம் ஆகாதவர்
முகவரி    5/190, திருவள்ளுவர் நகர், 2வது தெரு, கிருஷ்ணகிரி.
அலைபேசி    9443236944

2014 சொத்து கணக்கு:

அசையும் சொத்து    ₹11.76 லட்சம்
அசையா சொத்து    எதுவுமில்லை
இப்போது    பால் குடிக்காத பூனையா?

மக்களவை செயல்பாடு
வருகைப்பதிவு    88.48%
பங்கேற்ற விவாதம்    92
கேட்ட கேள்விகள்    415
தனி நபர் மசோதா    0
தனிச்சிறப்பு    2014 முதல் இன்றைய நாள் வரை, மக்களவையில் 16 கூட்டத் தொடர் நடந்துள்ளன. இவற்றில் 12 கூட்டத் தொடர்களில் 100க்கு 100 ஆஜராகி அசத்தியுள்ளார்.




கிழிஞ்சது கிருஷ்ணகிரி...

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி ஊத்தங்கரை (தனி), பர்கூர், வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6  சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. அனைத்து தொகுதிகளும் இந்த  மாவட்டத்திலேயே இருக்கிறது. இதுவரை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ்- 7, திமுக -5, அதிமுக- 2, தமாகா-1 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் அசோக் குமாருக்கு சீட் கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம்தான். எம்ஜிஆர் காலத்திலேயே கட்சியில் இருந்தாலும் அதிகமாக கண்டு கொள்ளப்படாமல் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் மூத்த அமைச்சரான கே.பி.முனுசாமிக்கும், எம்பி.யாக இருந்த தம்பிதுரைக்கும் முட்டல் மோதல் ஆரம்பித்தது. கே.பி.முனுசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ், திடீரென தம்பிதுரை பக்கம் சாய்ந்தார். இதற்கு பதிலடி கொடுக்க, அவரது சமூகத்தை சேர்ந்த ஒருவரை வளர்த்து விட நினைத்தார் முனுசாமி. அப்போது, அவரது  மனதில் இடம் பிடித்து மக்களவைக்கு செல்லும் வாய்ப்பை பெற்றவர்தான் அசோக்குமார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய செயலாளர், மாவட்ட அவைத்  தலைவர், மாவட்ட செயலாளர் என்று பல்வேறு நிலைகளில் வளர்ச்சியை எட்டியவர். ஆனால், இவர் வளர்ந்த அளவுக்கு தொகுதியும் வளரவில்லை; நம்பி வாக்களித்த மக்களின் நிலையும் உயரவில்லை என்பதுதான் வேதனை.

முனைப்பு காட்டாததால் புதர் மண்டிய ரயில் பாதை
ஜோலார்பேட்டை- ஓசூர் ரயில் பாதை அமைப்பதற்கான சர்வே, 10ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது. அது முடிந்து திட்ட மதிப்பீடாக ₹960 கோடி  நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான நிதியை பெறுவதில், முந்தைய எம்பி.க்கள் காட்டிய  ஆர்வத்தை, அசோக் குமார் காட்டவில்லை. இதனால், இந்த பாதையில் ஆண்டுக் கணக்கில் ரயில் ஓடாமல் அடர்ந்த புதராக உள்ளது.

பர்கூரில் ஜவுளிப்பூங்காசாயம் போன வாக்குறுதி
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஜவுளி கேந்திரமாக திகழ்வது பர்கூர் ஜவுளி மார்க்கெட். இங்குள்ள மொத்த மக்கள் தொகையே 10 ஆயிரம்தான். ஆனால், 15,000 ஜவுளிக்கடைகள் உள்ளன. தினமும் குறைந்தபட்சம் ₹3 கோடிக்கும், பண்டிகை  நாளில் ₹10 கோடிக்கும் விற்பனை நடக்கும். தமிழகம் மட்டுமின்றி,  ஜவுளிகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிச் செல்ல வடமாநிலங்களில்  இருந்தும் மக்கள் குவிகின்றனர். ஆனால், இந்த மார்க்கெட்டை மேம்படுத்த எம்பி எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. பைபாசில் இறங்கி பல மணிநேரம் நடந்தே இந்த  மார்க்கெட்டுக்கு வர வேண்டும். இங்கு, ‘ஜவுளிப் பூங்கா’ அமைக்கப்படும் என அவர் அளித்த வாக்குறுதி சாயம் போன  துணியாகி விட்டது.

ஒட்டாத தம்பிதுரை
மக்களவை  துணை சபாநாயகரான தம்பிதுரையும், இவரும் ஒரே சமூகம். ஆனாலும், இருவரின் நட்பும் தாமரை இலை தண்ணீர் போலத்தான்.  சமீபத்தில், கட்சியில் மாவட்டத்தை இரண்டாக பிரித்து பொறுப்புகள் வழங்கப்பட்டது. அதில்,
தம்பிதுரை கோஷ்டியை சேர்ந்த பல நிர்வாகிகளுக்கு கல்தா கொடுக்கப்பட்டது. கேபிஎம், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டது. கிழக்கு  மாவட்ட பொறுப்பு அசோக் குமாருக்கே மீண்டும் கிடைத்தது. இதனால், தம்பிதுரை ஆதரவாளர்கள் தனலாக கொதிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் சூழல்கள், இருவரையும் ஒட்டவிடாமல் செய்து விடுகிறது என்கின்றனர் லோக்கல் ரத்தத்தின் ரத்தங்கள்.

மூடுவிழா கண்ட600 நிறுவனங்கள்
இந்தியாவிலேயே  அதிக மலர் சாகுபடி ெசய்யும் பகுதி ஓசூர். சாமந்தி, மேரிகோல்ட், பட்டன்ரோஸ்  என்று இங்கு, நாள்தோறும் நூறு டன் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.  வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதோடு, வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி  செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சீசனில் அதிகளவில் சாகுபடியாகும் மலர்களை  பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்கு வசதி கேட்டு அலுத்து விட்டனர்  இங்குள்ள வியாபாரிகள். இப்படிப்பட்ட சூழலில் பணமதிப்பிழப்பு வந்தது; மலர் ஏற்றுமதி அடியோடு முடங்கியது. பண மதிப்பிழப்பு காரணமாக  600க்கும் ேமற்பட்ட சிறு, குறு, தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. இது  குறித்து நாடாளுமன்றத்தில் நம்ம ஊரு எம்பி., வாயே திறக்கவில்லை என்கின்றனர்  சிறு தொழில் முனைவோர்.

தொழில் வளம் இருந்தும் இடம் பெயரும் அவலம்
எம்பி தொகுதியில் உள்ள ஊத்தங்கரை, ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் வாழும்  பகுதி. இங்கு விவசாயம், கட்டுமானம் சார்ந்த கூலித் தொழில்களில்  ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர். தொழில் நசிவால் இவர்கள் பெங்களூரு,  திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இவர்களுக்கு  வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் தொழிற்பேட்டை துவங்க, 1,600 ஏக்கர் நிலம்  கையகப்படுத்தப்பட்டது. இதில், தொழிற்சாலைகளை கொண்டு வந்து நிரந்தர வேலை  வாய்ப்பை உருவாக்குவோம் என்பது அதிமுக அளித்த  வாக்குறுதி. அதை நிறைவேற்றாததால், இடம் பெயரும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

யானைகள் தாக்கி 5 ஆண்டில் 50 பேர் பலி
ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் மனித-வன உயிரின மோதல் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. வனங்களில் இருந்து ஊருக்குள் புகும் யானைகள், பயிர்களை நாசம்  செய்வதோடு, மனித உயிர்களுக்கும் உலை வைக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில்  மட்டும் 50 பேர் யானை தாக்கி இறந்துள்ளனர். இதேபோல், பத்துக்கும் மேற்பட்ட  யானைகளும் இறந்துள்ளன. பிரச்னை பூதாகரமாகும் போது மட்டுமே இது பற்றி  விவாதிக்கப்படுகிறது. அதன் பிறகு, இதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக்  கொள்வதில்லை. ‘நான் வெற்றி பெற்றால் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு  காண்பேன்’ என சூளுரைத்த எம்பி, அதை மறந்து விட்டார் என்கின்றனர் விவசாயிகள்.

ஆட்டிப்படைக்கும்  அண்ணன்

எம்பி அசோக் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை, ‘அண்ணன் சொன்னா சரிதான்...’  அதிமுக  மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான  கே.பி.முனுசாமி தான் அந்த அண்ணன். அவர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர்  முன் நின்றபடியேதான் பேசுவார் எம்பி. ெடண்டர், சிபாரிசு, தொகுதி  மேம்பாட்டு நிதி என்று எதுவாக இருந்தாலும், ‘முதல்ல அண்ணனை பார்த்துட்டு வாங்க...’ என்று சொல்வாராம். ‘இந்த மாதிரி பாசக்கார தம்பி நமக்கு எப்பவும் கிடைக்கமாட்டார்’ என அண்ணனும் பூரித்து விடுவாராம். இதனால், இந்த முறையும் அசோக்குக்கு எம்பி சீட் உறுதி என்கின்றனர் அடிபொடிகள்.

அப்படி போடு அருவாள...!!
தொகுதிக்கு செய்த நன்மைகள் பற்றி அசோக் குமார் கூறியவை:
தமிழகத்தில்  மக்கள் பிரச்னைக்காக அதிக விவாதங்களில் பங்கேற்ற எம்பி.,க்களில் 3வது  இடத்தில் இருக்கிறேன். சாமல்பட்டி ரயில் நிலையத்தில் ₹1 கோடியில் நடைமேடை  அமைத்துள்ளேன். மோட்டூர்-ஆவின்பால் வரையிலும், காவேரிப்பட்டணம்-நரிமேடு வரையிலும் ₹7 கோடியில் தேசிய ெநடுஞ்சாலை  விரிவாக்கம் மற்றும் மேம்பாலங்கள் கட்டியுள்ளேன். ஆனங்கூர்- ஓமலூர் ரயில்  பாதையை இருவழிப் பாதையாக மாற்றி இருக்கிறேன். இப்படி நான் நிறைவேற்றிய திட்டங்கள் ஏராளம். இந்த நிதியாண்டில் கூட ₹40 கோடி ெபற்று  60 கிமீ.ல் 23 சாலைகள், 3 மேம்பாலங்கள் அமைக்க போகிறேன்.  தொகுதிக்கு ஒதுக்கிய நிதியை விட, அதிகம் செலவு செய்தவன் நான். தமிழகத்தில்  ஒரு எம்பி கூட, இவ்வளவு தொகையை பெற்று செலவு செய்திருக்க மாட்டார்கள்.


தீராத தொகுதி தொல்லைகள்:

போகும் முன் ‘போகுதே’
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. ஆனால், எங்குமே நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகள் கிடையாது. இதனால், விபத்தில் படுகாயம் அடைவோரை பெங்களூரு, சேலம், வேலூர் போன்ற நகரங்களுக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. அங்கு  போவதற்குள், அவர்கள் ‘போய்’ விடுகிறார்கள். இதை எம்பி கண்டுக் கொள்வதே கிடையாது.
அது வரும்; இது வராது
மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரிக்கு ரயில் வசதி இதுவரை  இல்லை. எனவே, ஜோலார்பேட்டையில் இருந்து பர்கூர் - கிருஷ்ணகிரி - சூளகிரி  வழியாக ஓசூர் வரை ரயில் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்பது பல  வருடங்களாக தொடரும் கோரிக்கை. ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் அதற்கு அறிவிப்பு வரும்; ஆனால், திட்டம் வராது.
புகலிடம் இல்லாத புளி
புளி உற்பத்திக்கு புகழ் பெற்ற இத்தொகுதியில், அதை பாதுகாக்க  குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். ஓசூர் ரோஜாக்கள் பல நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே, மலர் சாகுபடியை மேம்படுத்தி, உரிய விலை  கிடைக்கும் வகையில் ஓசூரில் சர்வதேச விற்பனை மையம் அமைக்கப்படும் என காத்திருந்த கண்கள் இருண்டு  போனதுதான் மிச்சம்.
‘உஷ்ஷ்’ சரணாலயம்
வனப்பகுதிகள் நிறைந்த இம்மாவட்டத்தில், விவசாய நிலங்களை விலங்குகள் நாசம் செய்வதுடன், மனித உயிரிழப்பும்  ஏற்படுகிறது. கிராமங்களில் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வரும் யானைகள், மலைப்பாம்புகளுக்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என மக்களும், ஆர்வலர்களும் வைத்த கோரிக்கை, இப்போதும் கோரிக்கையாகவே இருக்கிறது.
ஓடாத ஒகேனக்கல்
புளோரைடு பாதிப்பால் அவதிப்படும் மக்கள் நலனுக்காக துவங்கப்பட்டதே  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். இதை மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் விரிவுபடுத்தி,  சுகாதாரமான குடிநீர் கிடைக்க ஆரம்பத்தில் காட்டப்பட்ட  முனைப்பு,  தேர்தலுக்கு பிறகு முடங்கி விட்டது. இதுவரை 10% கிராமங்களுக்கு கூட இந்த குடிநீர் வந்து சேரவில்லை.
வாசமில்லா குண்டுமல்லி
தேன்கனிக்கோட்டையில் அரசு  கலைக்கல்லூரி துவங்க வேண்டும். அதிகளவில் குண்டுமல்லி விளையும் காவேரிப்பட்டணத்தில் சென்ட் தொழிற்சாலை,  போச்சம்பள்ளியில் கிரானைட் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும். படேதலாவ் ஏரிக்கு  தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்பதெல்லாம், காலம் கடந்தும் கண்டு கொள்ளப்படாத  மக்களின் எதிர்பார்ப்புகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Krishnagiri ,Ashok Kumar , Krishnagiri MP, Ashok Kumar, Industries
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்