×

புதிய பஸ்கள் வழங்குவதில் பாரபட்சம் கொங்கு மண்டலத்திற்கு மட்டும் முக்கியத்துவம்: 1,541 பஸ்களில் சென்னைக்கு வெறும், 57 மட்டுமே ஒதுக்கீடு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், ரூ.140 கோடி மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளின் இயக்கம் நேற்று துவங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், கொங்கு மண்டலத்திற்கு மட்டும் முக்கியத்துவம்  வழங்கப்படுவதாகவும், சென்னை புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை மூன்று கட்டமாக, 1,541 பஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு வெறும், 57 பஸ்கள்  மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 134 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான, 515 புதிய பேருந்துகளின் இயக்கம் துவங்கி வைக்கப்பட்டது. அப்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு (சென்னை)  40, விழுப்புரம், 60, சேலத்திற்கு, 78, கோவைக்கு, 172, கும்பகோணத்திற்கு, 64, மதுரைக்கு, 32, திருநெல்வேலி, 69, என, 134 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 515 புதிய  பேருந்துகள் விடப்பட்டன.

இரண்டாவது கட்டமாக, 155 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 471 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அரசு விரைவு போக்குவரத்துக்  கழகத்திற்கு (சென்னை) 60 பேருந்துகளும்,  விழுப்புரத்திற்கு, 103, சேலத்திற்கு, 77, கோவைக்கு, 43, கும்பகோணத்திற்கு, 111, மதுரைக்கு, 30, திருநெல்வேலிக்கு, 46 பேருந்துகளும், சென்னை மாநகர போக்குவரத்துக்  கழகத்திற்கு  ஒரு பேருந்தும், என 155 கோடியே 17 லட்சம்  ரூபாய்  மதிப்பீட்டில் 471 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று ₹140 கோடி மதிப்பீட்டில், 555 புதிய பஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 56 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 82  பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 112 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 140 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 102 பேருந்துகளும், மதுரை அரசு  போக்குவரத்துக் கழகத்திற்கு 63 பேருந்துகள் என மொத்தம் ரூ.140 கோடி மதிப்பீட்டில், 555 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை தலைமை செயலகத்தில் நேற்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்  துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதுவரை மூன்று கட்டமாக, 1,541 பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சென்னை  ‘எம்டிசி’க்கு வெறும், 57 பஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், கொங்கு மண்டலமான, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் விடப்பட்டுள்ளது. இதனால், மற்ற பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் இயக்கப்படும் பஸ்களுக்கு, மற்ற இடங்களில் இயக்கப்படும் பஸ்களை விட கூடுதல் வசதி செய்ய வேண்டும். அதனால் இங்கு குறைவாக  வழங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வழங்கப்படும் போது, கூடுதல் பஸ் விடப்படும்’’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kongu Zone ,Chennai , Discrimination, providing, Important,reserved , Chennai ,
× RELATED அக்.1ம் தேதி முதல் கூடுதல் பஸ்கள் இயக்க...