×

அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள், காளையர் : தற்காலிக வாடிவாசல் அமைத்து பயிற்சி

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளையை அடக்குபவர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் பாரம்பரியமாக சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் அய்யம்பாளையத்தில் இம்மாதம் 27ம் தேதி மற்றும் பிப்ரவரி 3ம் தேதியில் 2 இடங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தைத்திருநாளான முதல் நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், எம்.வாடிப்பட்டி, முத்துலாபுரம், சித்தரேவு, சித்தையன்கோட்டை பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த காளைகளுக்கு தற்காலிகமாக வாடிவாசல் அமைத்தும், மண்களம் அமைத்தும் பிரத்தியேகமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இக்காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தீவிர பயிற்சி அளிக்கும் பணிகள் அய்யம்பாளையத்தில் நடைபெற்று வருகிறது.

இக்காளைகளுக்கு வாரத்தில் 1 நாள் நீச்சல் பயிற்சியும், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் காளைகளுக்கு சுமார் 4 கி.மீ. தூரம் நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காளைகளுக்கு மண்குவியலில் முட்டும் கொம்பு பயிற்சியும் அதைத்தொடர்ந்து காலை மாலை இருவேளைகளில் தவிடு, பருத்தி விதை, சோளம், அரிசிமாவு, பேரிச்சம்பழம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. வட மஞ்சுவிரட்டு பயிற்சி என்னும் வித்தியாசமான பயிற்சியும் வழங்கப்படுகிறது. பயிற்சியில் ஜல்லிக்கட்டு மாட்டை ஓடாத வண்ணம் களத்தின் நடுவில் வடகயிறால் கட்டி வைத்து மாடு களத்தில் சுற்றி வந்து மாடுபிடி வீரர்களை ஒருகை பார்ப்பதற்காக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. காளைகளை அடக்குவதற்கு காளையர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காளை வளர்ப்பவர்கள் கூறுகையில், ‘அய்யம்பாளையம் குட்டிக்கரடு பகுதியில் மாடுகளுக்கு பயிற்சியளிப்பதற்காக தற்காலிமாக வாடிவாசல் அமைத்துள்ளோம்.

இதில் காளைகளை விட்டு பழக்கப்படுத்தினால் போட்டி நேரத்தில் வாடிவாசலை பயமின்றி தாண்டும். மாடுகளை கயிற்றால் கட்டி மாடுபிடி வீரர்கள் பயிற்சியளிக்கின்றனர். இங்கு கரிமாடு, நெத்திமரை, கரைசல், செவலைகாளை, செலவைமரை, மன்னப்போர், மரமாடு, கரம்பைமாடு உட்பட 15க்கும் மேற்பட்ட வகையான ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மாடுகள் அய்யம்பாளையம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், சில்வர் மற்றும் வெண்கல பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்களை பெற்றுள்ளது. இந்தவகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் பயிற்சி அளித்து வருகிறோம். காளைகளுக்கு பெயர் வைத்து எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வளர்க்கிறோம். ரேஷன் கார்டில் பெயர் மட்டும்தான் இல்லை. மற்றபடி இதுவும் எங்கள் குடும்ப உறுப்பினர் தான்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jallikattai ,Kalaiyar , Ayyampalaiyam, jallikattu, Bulls
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 6...