×

மத்திய, மாநில ஆட்சிகளின் தன்மையை அறிந்திருப்பீர்கள் வருங்காலத்தை மனதில் நிறுத்தி மாணவர்கள் செயல்படுங்கள்: மு.க.ஸ்டாலின் அறிவுரை

நெல்லை: மத்திய, மாநில ஆட்சிகளின் தன்மையை அறிந்திருப்பீர்கள். வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுங்கள் என சங்கரன்கோவிலில் நடந்த அண்ணா பிறந்தநாள் போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் அண்ணா 110வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவில் நடந்த பேச்சு. கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, நெல்லை மாவட்டம்  சங்கரன்கோவிலில் நேற்று நடந்தது. இளைஞரணி மாநில செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையை வழங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  நெல்லையில் நடந்த இளைஞரணி மாநில மாநாட்டில் முக்கிய முடிவுகளை எடுத்தோம். அப்போது மாநாட்டிற்கு  செலவிடப்பட்ட தொகை போக மீதமுள்ள தொகையை வங்கியில் டெபாசிட் செய்து, அதன் வட்டி தொகையை ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள், இளைஞர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு, ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம்.

11வது ஆண்டாக இங்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் பேசிய மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கடந்தாண்டு நான் எப்படி வந்தேன், இந்த ஆண்டு எப்படி வந்துள்ளேன், அடுத்த ஆண்டு எப்படி வருவேன் எனக் குறிப்பிட்டார்.என்னை பொறுத்தவரை எப்போதும் ‘உங்களில் ஒருவனாக’ இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெருமையாக நினைக்கிறேன். நேற்று வரை இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்தது. நாளை  (இன்று) சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட வேண்டியிருந்தது. இந்த சூழலில் மாணவர்கள் நிகழ்ச்சி என்பதால் பங்கேற்கும் ஆர்வத்தில் வந்துள்ளேன். கடந்த 11 ஆண்டுகளாக இந்த  போட்டிகளில் 16,146 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.60 கோடி ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ்2வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 4,887 மாணவர்களுக்கு  ரூ.3 கோடியே 79 லட்சத்து 73 ஆயிரம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறமைகளை வளர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

திமுகவில் நான் திடீரென பொறுப்புக்கு வரவில்லை. மாணவனாக இருந்த போது பொறுப்புகளை வகித்து படிப்படியாக இந்த வளர்ச்சியை பெற்றுள்ளேன். மாணவனாக இருக்கும் போது இளைஞர் அமைப்பை தொடங்கி அதற்கு நான்  செயலாளராக இருந்துள்ளேன். நான் இந்தளவுக்கு உயர்ந்ததற்கு இளைஞரணி பொறுப்பே காரணமாகும். பிறந்த வீடு, புகுந்த வீடு என இரு வீடுகளை எடுத்து கொண்டால், பிறந்த வீட்டிற்கு வரும் போது நாம் மிகுந்த  மகிழ்ச்சியடைவோம். அதுபோல இளைஞரணி நிகழ்ச்சிக்கு எப்போது வந்தாலும் பிறந்த வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி.மாணவர்களாகிய நீங்கள் அண்ணா, கருணாநிதி வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். நான் இந்நிகழ்ச்சியில் அரசியல் பேச வரவில்லை. இருப்பினும் அரசியலை தொடாமல் செல்வது நல்லதல்ல. தமிழகத்தின்  இன்றைய சூழலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மத்திய, மாநில ஆட்சிகள் எப்படி நடக்கின்றன? அந்த ஆட்சிகளின் தன்மையை அறிந்திருப்பீர்கள். வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மனதில் நிறுத்தி  செயல்படுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : regimes ,state ,MK Stalin , central ,state regimes, keep, students activ,MK Stalin's advice
× RELATED வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது...