×

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு: மீண்டும் ரயில் போக்குவரத்து துவக்க திட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்க ரூ.208 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரயில் பாதைகளை கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பழைய ரயில் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1964ம் ஆண்டு வீசிய புயலில் உருக்குலைந்த தனுஷ்கோடிக்கு, மீண்டும் உயிர் கொடுக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. புயலுக்கு பின்னர் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கடந்த 1975ம் ஆண்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ேகாயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே குறுகிய சாலை அமைக்கப்பட்டது. வாகன போக்குவரத்து அதிகம் இல்லாததால், அந்த சாலையும் நாளடைவில் பெயர்ந்து, பழுதடைந்து விட்டது. பின்னர் ரூ.64 கோடியில் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு பின்னர், தனுஷ்கோடிக்கு போக்குவரத்து துவங்கியது. சுற்றுலாப் பயணிகள், பக்தர்களே அதிக எண்ணிக்கையில் தனுஷ்கோடி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக 1914ம் ஆண்டில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருந்து மண்டபம், பாம்பன் வழியாக கடற்கரையோரத்தில் ரயில் போக்குவரத்தை ஆங்கிலேயர்கள் துவக்கினர். தொடர்ந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து, கரையூர் கடற்கரை, ஜடாமகுட தீர்த்த கோயில் வழியாக தனுஷ்கோடி வரை ரயில்கள் இயக்கப்பட்டன. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் இருந்த மணல் திட்டுகளால் ரயில் பாதையில் மணல் குவிந்து அடிக்கடி ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் நகரும் மணல் குன்றுகளால் ரயில் பாதை அடிக்கடி மூடப்பட்டது. இதனால் 1937ம் ஆண்டுடன் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த ரயில் பாதையும் ரயில்வே நிர்வாகத்தினால் கைவிடப்பட்டது. 2003ம் ஆண்டு மத்தியில் பாஜ ஆட்சியின்போது, ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ்குமார் தனுஷ்கோடியை ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார். மீண்டும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் போக்குவரத்தை துவக்கலாம் என அப்போது முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ரயில் பாதை, நிலப்பகுதிகளை அடையாளம் காணும் பணி நடந்தது.  

தற்போது ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17 கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைத்து ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.208 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான ரயில் பாதை பகுதியை ஆய்வு செய்யும் பணிகள் கடந்த 3ம் தேதி துவங்கியது. 3 நாட்கள் நடந்த இந்த ஆய்வு பணி நேற்று முடிந்தது. ரயில்வே அதிகாரிகள் மற்றும் ராமேஸ்வரம் நிலஅளவை அலுவலர்களால் ராமேஸ்வரம் ரயில் நிலையம் முதல் கரையூர், தெற்குகரையூர், ஜடாமகுட தீர்த்த கோயில், முகுந்தராயர் சத்திரம் வழியாக தனுஷ்கோடி வரை பழைய ரயில் பாதை சென்ற வழித்தடத்தில் ரயில்வே நிலத்தை ஆய்வு செய்து, சர்வே செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது. ஜடாமகுட தீர்த்த கோயில் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சவுக்கு மரங்கள் அடர்ந்த பகுதியிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஏற்கனவே இருந்த ரயில்வே பாதையில் பல இடங்களில் தற்போது ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன. அடுத்த கட்டமாக அவற்றை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அகற்றும் பணிகளை ரயில்வே நிர்வாகம் துவக்க உள்ளது.

27ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவாரா?
மதுரையில் இம்மாதம் 27ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்திற்கும், மண்டபம்-பாம்பன் இடையே கடலில் புதிய ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ராமநாதபுரம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த இரு திட்டமும் செயல்வடிவம் பெற்றால் இப்பகுதியில் சுற்றுலா, மீன்பிடி தொழில் மேம்பாடு அடைவதுடன், அதிகளவில் வேலைவாய்ப்பும் உருவாகும். ராமேஸ்வரம், தனுஷ்கோடி உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram-Dhanushkodi Railway , Rameswaram-Dhanushkodi, train route,
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...