×

நாகூர் தர்கா வழக்கில் ஐகோர்ட் அதிரடி: மக்கள் நலனுக்காகவே காவல் நிலையம் நாகை எஸ்பி ஆஜராக அறிவுரை

சென்னை: மக்கள் நலனுக்காகவே காவல்துறை உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம் என்று நாகூர் தர்கா வழக்கில் போலீசாருக்கு அறிவுறுத்திய உயர் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாகை மாவட்ட எஸ்பிக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்கா உள்ளது. ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து வழிபடும் புனித தலமாக நாகூர் தர்கா விளங்குகிறது. இந்நிலையில், தர்கா முன்னாள் நிர்வாகி தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதையடுத்து, தர்காவின் முன்னாள் நிர்வாகி மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது ஏன் போலீசார் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இது குறித்து நாகூர் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாகூர் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் (தற்போது திருவாரூர் இன்ஸ்பெக்டர்) நேரில் ஆஜரானார். அப்போது, வக்கீல் ஹாஜா மொய்தீன்கிஸ்தி ஆஜராகி, விசாரணை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை போலீசார் மதிக்கவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் இன்ஸ்பெக்டர் சம்மந்தப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் நாகை எஸ்பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மக்களின் நலனுக்காகவே காவல் நிலையங்கள் உள்ளன. காவல்துறை தனது கடைமையை உரிய நேரத்தில் எடுக்காமல் இருப்பதை ஏற்கமுடியாது. பொது மக்களின் புகார்களுக்கு காலதாமதமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagore Dargah , Nagore Dargah,case,Court,order,public,benefit
× RELATED நாகூர் தர்காவில் சந்தன கூடு ஊர்வலம்...