×

புஜாரா 193, பன்ட் 159*, ஜடேஜா 81 இந்தியா 622 ரன் குவித்து டிக்ளேர்: தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசம்

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன் எடுத்திருந்தது. ராகுல் 9, மயாங்க் 77, கேப்டன் கோஹ்லி 23, ரகானே 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். புஜாரா 130 ரன், விஹாரி 39 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். விஹாரி மேற்கொண்டு 3 ரன் மட்டுமே சேர்த்து லயன் சுழலில் மார்னஸ் வசம் பிடிபட்டார். புஜாரா - ஹனுமா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து புஜாராவுடன் ரிஷப் பன்ட் இணைந்தார். இருவரும் உறுதியுடன் விளையாடி ரன் குவிக்க, இந்திய ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. புஜாரா இரட்டை சதத்தை நோக்கி முன்னேற, மறுமுனையில் பன்ட் அரை சதம் அடித்தார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நோகடித்த புஜாரா 193 ரன் எடுத்த நிலையில் (373 பந்து, 22 பவுண்டரி) லயன் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து இரட்டை சதம் விளாசும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டார். புஜாரா - பன்ட் இணை 6வது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, ரிஷப் பன்ட் - ரவீந்திர ஜடேஜா ஜோடி 7வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ஆஸி. பந்துவீச்சை சிதறடித்தது. மிகுந்த தன்னம்பிக்கையுடன் அடித்து விளையாடிய பன்ட் 137 பந்தில் சதத்தை நிறைவு செய்து அசத்தினார். அவருக்கு பொறுப்புடன் கம்பெனி கொடுத்த ஜடேஜா 89 பந்தில் அரை சதம் அடித்தார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 600 ரன்னையும் கடந்து மிரட்டியது.

பன்ட் 185 பந்தில் 150 ரன் எடுத்தார். பன்ட் - ஜடேஜா ஜோடி 7வது விக்கெட்டுக்கு 204 ரன் சேர்த்தது. ஜடேஜாவும் சதம் அடித்து அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 81 ரன் எடுத்து (114 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) லயன் சுழலில் கிளீன் போல்டானார். இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் என்ற ஸ்கோருடன் (167.2 ஓவர்) முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. பன்ட் 159 ரன்னுடன் (189 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.  ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நாதன் லயன் 57.2 ஓவரில் 8 மெய்டன் உட்பட 178 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

ஹேசல்வுட் 2, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்துள்ளது. ஹாரிஸ் 19, கவாஜா 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. அணி இன்னும் 598 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியை டிரா செய்தாலே போதும் என்பதால், இந்திய அணி முதல் முறையாக ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சரித்திர சாதனை படைக்கும் வாய்ப்பு மிகப் பிரகாசமாகி உள்ளது.

டோனியின் சாதனை முறியடிப்பு
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஸ்கோர் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்.எஸ்.டோனியின் சாதனையை ரிஷப் பன்ட் நேற்று முறியடித்தார். 2006ம் ஆண்டு பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்டில் டோனி 148 ரன் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது. சிட்னியில் நேற்று 159* ரன் விளாசிய பன்ட், டோனியின் 12 ஆண்டு கால சாதனையை தகர்த்தார்.

ஆஸி. மண்ணில் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்!
ஆஸ்திரேலியாவில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை ரிஷப் பன்ட்டுக்கு கிடைத்துள்ளது. சிட்னி டெஸ்டில் நேற்று அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 159 ரன் விளாசிய பன்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
* 1967ல் அடிலெய்டு மைதானத்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியர் 89 ரன் எடுத்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அவரது சாதனையை பன்ட் முறியடித்ததுடன், டெஸ்ட் போட்டிகளில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். முன்னதாக அவர் 2018 செப்டம்பரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 114 ரன் எடுத்திருந்தார்.
* ஆசியாவுக்கு வெளியே 2 டெஸ்ட் சதங்களை விளாசிய ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் பன்ட் வசமாகி உள்ளது.
* ஆஸி. மண்ணில் மிக இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பன்ட் (21 வயது, 92 நாள்) 2வது இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக, மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 1992ம் ஆண்டில் சிட்னி (18 வயது, 256 நாள்) மற்றும் பெர்த்தில் (18 வயது, 285 நாள்) சதம் விளாசி உள்ளார்.
* ஆஸ்திரேலியாவில் அதிக ரன் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர்கள்: ரிஷப் பன்ட் (159*, சிட்னி 2019), பரூக் இன்ஜினியர் (89, அடிலெய்டு 1967), கிரண் மோரே (67*, மெல்போர்ன் 1991), பார்திவ் பட்டேல் (62, சிட்னி 2004), எம்.எஸ்.டோனி (57*, சிட்னி 2012).

1258 பந்து...
நடப்பு தொடரில் இதுவரை 1,258 பந்துகளை சந்தித்துள்ள புஜாரா, 2003-04 தொடரில் டிராவிட் 1,203 பந்துகளை சந்தித்து படைத்த சாதனையை முறியடித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bant 159 ,series ,Jadeja 81 India 622 Run Diggler , Pujara 193, Pant 159 *, Jadeja 81, India
× RELATED 20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை...