×

பூமிக்கு அடியில் மின்கேபிள் அமைத்து 800 கி.வாட் மின்சாரத்தை கொண்டு செல்வதில் சாத்தியமில்லை : அமைச்சர் தங்கமணி

சென்னை : மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்க தி்ட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில், மின்கோபுரம் அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது. ஆனால் விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று அமைச்சர் தங்கமணியுடன், விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மின்கோபுரம் அமைப்பது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி, பூமிக்கு அடியில் மின்கேபிள் அமைத்து 800 கிலோவாட் மின்சாரத்தை கொண்டு செல்வதில் சாத்தியமி்ல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தில் 800 கிலோவாட் என்பதை 400 கிலோவாட் என்ற அடிப்படையில் இரண்டாக பிரித்து புதைவட மின்கேபிள்கள் மூலம் பூமிக்கு அடியில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, 800 கிலோவாட் மின்சாரத்தை கொண்டு செல்ல புதைவட மின்கேபிள்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதிகபட்சமாக 350 கிலோவாட் மின்சாரத்தை கொண்டு செல்லவே கேபிள் உள்ளது என்றும் கூறியுள்ளார். எனவே மின்கோபுரங்கள் அமைப்பதைத் தவிர வேறுவழியில்லை என அவர் தகவல் அளித்துள்ளார். வளர்ந்து வரும் தமிழகத்தில் மின்சார தேவை அதிகளவில் இருப்பதால் உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுத்தால் போதுமான அளவு மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்காமல் சென்றுவிடும் என அவர் தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் பயிர்கள் போக, விளை நிலங்களுக்கும் போதுமான அளவு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் விவசாயிகளை வஞ்சிக்க வேண்டிய அவசியம் அரசிற்கு இல்லை என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு திட்டத்தையும் எதிர்த்து இப்படி போராடி கொண்டே இருந்தால் தமிழகத்திற்கு ஒரு திட்டமும் வராது, நஷ்டம் தான் ஏற்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Goldman ,earth , Farmland,Minister Goldman,Stalin,Assembly
× RELATED மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!