×

விண்வெளி ஆய்வில் சீனா சாதனை நிலவின் மறுபக்கத்தில் இறங்கியது சாங்கே -4

பீஜிங்: நிலவின் மறுபுறத்தை ஆய்வு செய்வதற்காக, சீனா அனுப்பிய சாங்கே-4 ஆய்வுக்கலம், நேற்று வெற்றிகரமாக தரையிறங்கி முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியது. இதற்கு நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை முந்துவதற்காக சீனா பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. பூமியை நோக்்்கியுள்ள நிலவின் முன் பகுதியில்தான் இதுவரை ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. பூமியும், நிலவும் ஒரேவிதமான சுழற்சி முறையில் இருப்பதால், நிலவின் முன்பகுதி எப்போதும் பூமியை பார்த்தபடி இருக்கும். அதற்கு பின்புறம் உள்ள பகுதியில் தரையிறங்கி இதுவரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. கடந்த 1959ம் ஆண்டு ரஷ்ய விண்கலம் இப்பகுதியை தொலைவில் இருந்து புகைப்படங்கள் மட்டுமே எடுத்துள்ளது. இங்கு ஆய்வு நடத்துவதற்காக சாங்கே-4 என்ற ஆய்வுக்கலத்தை, ‘லாங்க் மார்ச்-3பி’ எனற ராக்கெட் மூலம் சீனா கடந்த மாதம் 8ம் தேதி அனுப்பியது. ‘சாங்கே’ என்பதற்கு சீன மொழியில் ‘நிலவு தேவதை’ என பொருள். சீன நேரப்படி நேற்று காலை 10.26 மணி சாங்கே-4 ஆய்வுக்கலம் நிலவின் பின்புறத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.  

சாங்கே-4 ஆய்வுக் கலத்தில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. அவை, 2,400 பவுண்ட் எடையுள்ள லேண்டர், 300 பவுண்ட் எடையுள்ள ரோவ ர்(நகர்ந்து செல்லும் ஆய்வு வாகனம்). லேண்டரில் இருந்து ரோவர் வெளிவந்து தனது முதல் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. சாங்கே-4 ஆய்வுக்கலத்துக்கும், பூமிக்கும் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக ‘க்யூகியாவோ’ என்ற செயற்கைக்கோளை சீனா கடந்தாண்டு மே மாதமே அனுப்பி விட்டது. நிலவின் மறுபுறத்தை ஆய்வு செய்ய சீனா மேற்கொண்டுள்ள இந்த முயற்சி, உலக விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சாங்கே-4 ஆய்வுக்கலத்தில் உள்ள கருவிகள் நிலவின் பின்புற தரைப் பகுதியை குறைந்த அலைவீச்சு ரேடியோ அலைகள் மூலம் ஆய்வு செய்து, அதில் உள்ள தாதுக்கள் பற்றிய தகவலை தெரிவிக்கும். நிலவின் சுற்றுச்சூழலை ஆய்வு செய்ய அங்குள்ள நியூட்ரான் கதிர்வீச்சு, நியூட்ரான் அணுக்களை ஆய்வுக்கலத்தில் உள்ள கருவிகள் அளவிட உள்ளன.

நாசா வாழ்த்து
சீனாவின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து நாசா விஞ்ஞானி ஜிம் பிரின்டெஸ்டைன் ‘சாங்கே-4, நிலவின் பின்புறத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளதுபோல் தெரிகிறது. சாங்கே-4 குழுவுக்கு வாழ்த்துக்கள். நிலவின் அறியப்படாத பகுதியிலிருந்து கிடைக்கும் தகவல்களை சர்வதேச அறிவியல் சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது’ என கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,Shenzhen-4 , China, Space Study,, moon, Sangee-4
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன