×

வேலூர் வட்டச்சாலைக்கு இறுதி கட்டத்தில் நில எடுப்புப்பணிகள்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவும், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர கால சிகிச்சைக்காக நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்ஸ்  வாகனங்கள் விரைந்து வந்து சேரவும், வேலூர் மாநகர சுற்றுச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் காட்பாடி அடுத்த அம்முண்டி-மேலகுப்பம்-மூஞ்சூர்பட்டு சாலை பாதுகாக்கப்பட்ட  வனப்பகுதிக்குள் வருவதால் சுற்றுச்சாலை திட்டமான வட்டச்சாலை திட்டம் கேள்விக்குறியானது.

அதற்கு பதில் மாற்றப்பட்ட வட்டச்சாலை திட்டமாக வேலூர், குடியாத்தம் புறவழிச்சாலைகள் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக வேலூர் தேசிய நெடுஞ்சாலை 2016-17 திட்டப்பணிகளில்  மங்களூர்-விழுப்புரம் சாலையை அகலப்படுத்தவும், வேலூர், குடியாத்தம் நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ரூ.104 கோடி மதிப்பீட்டில் வேலூர் மற்றும குடியாத்தம் புறவழிச்சாலைகள் அமைக்க ஒப்புதல்  அளிக்கப்பட்டு அதற்குரிய நிலஎடுப்புப்பணிகள் தொடங்கி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இதில் 7 கி.மீ நீளம் கொண்ட குடியாத்தம் புறவழிச்சாலை மங்களூர்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை எண் 234ல் குடியாத்தம் நகருக்கு முன்பாக நெல்லூர்பேட்டை, சீவூர், பாக்கம், பிச்சனூர், கொண்டசமுத்திரம், சேத்துவண்டை கிராமங்கள் வழியாக சென்று காட்பாடி சாலையில் தேசிய நெடுஞ்சாலை 234ல் இணைகிறது.

அதேபோல், 20.7 கி.மீ நீளம் கொண்ட வேலூர் வட்டச்சாலையான புறவழிச்சாலை காட்பாடி சாலையில் லத்தேரி நகருக்கு முன்பாக வலதுபுறம் பிரிந்து லத்தேரி, அன்னங்குடி, திருமணி, சோழமூர், கொத்தமங்கலம், பொய்கை,  புத்தூர், தெள்ளூர், சேக்கனூர், அரியூர், பென்னாத்தூர், சாத்துமதுரை, நெல்வாய் கிராமங்கள் வழியாக விழுப்புரம்-மங்களூர் தேசிய நெடுஞ்சாலை 234ல் இணைகிறது. இச்சாலையில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், லத்தேரி அருகில் ரயில்வே மேம்பாலமும், சாத்துமதுரை அருகில் ரயில்வே மேம்பாலமும், சென்னை-பெங்களூரு ஆறுவழிச்சாலையில் பொய்கை அருகில் மேம்பாலம்  மற்றும் சிறிய வாகன மேம்பாலம் நான்கும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்புறவழிச்சாலைகளுக்கான நில எடுப்புப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. நில உடமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. தொடர்ந்து சாலை விரிவாக்கத்துக்காக அடையாளம் காணப்பட்ட மரங்கள் அகற்றும் பணிகளும், கட்டிடங்கள் அகற்றும் பணியும் தொடங்குகிறது. இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘வேலூர், குடியாத்தம் புறவழிச்சாலைகள் அடங்கிய வட்டச்சாலைக்கான நில எடுப்புப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது இழப்பீடு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் தொடங்கி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவடையும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Finalization ,Landline Officers , Vellore, Vadakara, land paddy and highway officials
× RELATED அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய...