×

ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் தேக்கம் : விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அணையில் தேக்கப்பட்டுள்ள தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டாக ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதி உள்ளது. ஆங்கிலேயர் காலத்து அணையான இந்த அணை பழமை வாய்ந்ததாகும். ஸ்ரீவை அணையில் இருந்து பிரியும் வடகால், தென்கால் ஆகிய இரண்டுமே தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கான விவசாயத்தை செழிக்க வைத்து வருகின்றன. பழமை வாய்ந்த இந்த அணையை தூர்வார வேண்டும் என கடந்த 2005ம் ஆண்டு முதலே பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அணை கட்டப்பட்டபோது 8 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்துக் கொள்ள வசதிகள் இருந்தன. அணை தூர்வாரப்படாத காரணத்தால் இரண்டு அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை என சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர்.

பசுமை தீர்ப்பாயம் இதை விசாரித்து அணை தூர்வாரும் பணிகளை நடத்த உத்தரவிட்டது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணை ஷட்டர் சேதமடைந்தும், பொத்தல் விழுந்தும் காணப்பட்டது. மேலும் அணைப்பகுதியில் காணப்பட்ட அமலை செடிகளால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் மிதந்து வரும் அமலை செடிகளும், கழிவுகள், மாசுகளும் ஸ்ரீவை அணைப்பகுதியில் சிக்கி கொள்வது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் விவசாயிகள் முறையீட்டின் பேரில் கடந்தாண்டு தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தலைமையில் வருவாய்துறையினர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், விவசாயிகள் அங்கு அமலை செடிகள் அகற்றும் பணிகளை நடத்தினர்.

ஆற்று நீரை உறிஞ்சி வைத்திருந்த அமலை செடிகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து தண்ணீர் வரத்தை தடை செய்யும் சீமைகருவேல மரங்களும் அகற்றப்பட்டன. தற்போது ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதி ஓரளவுக்கு தண்ணீரை தேக்கி வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பாசன குளங்களுக்கு ஓரளவுக்கு தண்ணீர் செல்வதால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை விளைவிப்பதில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தண்ணீர் எடுக்க தடை


ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தூத்துக்குடியை சேர்ந்த வணிக நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் தண்ணீர் எடுப்பதாக திமுக நிர்வாகி ஜோயல் ஏற்கனவே பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதால் மத்திய சுற்றுசூழல் அமைச்சக விதிகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த நவம்பர் மாதம், வணிக நோக்கத்துடன் ஆலைகள் தண்ணீர் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது. ஸ்ரீவைகுண்டம் அணையில் தற்போது தேங்கியுள்ள தண்ணீரால் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Srivilliputhu Dam: Farmers , Srivaikuntam dam, water,farmers
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...