×

பாடி முதல் திருநின்றவூர் வரை கிடப்பில் சாலை விரிவாக்க பணி

* நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்
* கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆவடி: பாடி முதல் திருநின்றவூர் வரை கிடப்பில் உள்ள சிடிஎச் சாலை விரிவாக்க பணிகளால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்கலில் தினமும் தவித்து வருகின்றனர். மேலும்,  பாதசாரிகளும் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். சென்னையில் இருந்து பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர்,  திருத்தணி வழியாக திருப்பதிக்கு  சிடிஎச் சாலை செல்கிறது. இந்த சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்  ஏராளமாக உள்ளன. இந்த சாலை தினமும் 50 ஆயிரத்திற்கும்  அதிகமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சிடிஎச் சாலை எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலை மத்திய, மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில்  உள்ளது.இந்த  சாலையை 2013ம் ஆண்டு முதல் விரிவுப்படுத்த போவதாக அரசு கூறியும் இதுவரை  பணிகள் முழுவீச்சில் நடைபெறாமல் உள்ளன. இதன் காரணமாக சிடிஎச் சாலையில் வாகன  ஓட்டிகள், பாதசாரிகள் தினமும் எண்ணிலடங்கா துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சென்னை புறநகர் பகுதிகளில் சிடிஎச் சாலை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது 4 வழிப்பாதையாக உள்ள சிடிஎச்  சாலையை 6 வழி பாதையாக மாற்றுவதாக அரசு கூறி ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது.

இதில் பாடி, மண்ணூர்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், திருநின்றவூர் பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை 50 அடிக்கு குறுகி உள்ளது. இதனால் 4 வழி சாலை தற்போது 2  வழி சாலைபோல மாறிவிட்டது.திருமுல்லைவாயல் முதல் அம்பத்தூர் வரை கடந்த 2017ம் ஆண்டு, டிசம்பரில் மின் கேபிள் புதைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளம் ஒரு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் சீரமைக்கப்படாமல்  கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் தினமும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை உள்ளது. மேலும்  பாதசாரிகள் நடமாட முடியாமல் திணறுகின்றனர். இங்கு முக்கிய பிரச்னையாக சாலையின் பல இடங்களில் செண்டர் மீடியனில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கனரக வாகனங்களில் அடிபட்டு பலியாகின்றனர். இதனால் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு வருகின்றன.இதுகுறித்து மாவட்ட  கலெக்டர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகம்  உள்ளிட்டோருக்கு சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார்கள் அனுப்பியும்  சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து  வருகின்றனர்’’ என்றனர்.

சாலையை அளவீடு செய்து நாடகம்: சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பாடி முதல் திருப்பதி வரை சிடிஎச் சாலை தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வந்தது. இந்த சாலையை 2009ம்  ஆண்டு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு 200 அடி சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு ₹2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் பாடி முதல்  திருநின்றவூர் வரை வியாபாரிகள், குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பாடி முதல் திருநின்றவூர் வரை மாநில நெடுஞ்சாலையாக  மாற்றப்பட்டது. பின்னர் 2013ம் ஆண்டு இச்சாலையை ஆறு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனாலும், அவ்வப்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை சீரமைக்கப்படுவதாக கூறி அளந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிகள்  கிடப்பில் கிடக்கின்றன. எனவே, இனிவரும் நாட்களில் சி.டி.எச் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruninavoor , From Badi,Thirunavidavur,Road,expansion work
× RELATED சென்னையில் திருநின்றவூர் அருகே.10 லட்சம் பந்தய புறாக்கள் திருட்டு