சேலம்: தமிழகம் முழுவதும் கட்டுமான பணிகள் குறைந்துள்ளதால், செங்கல் விற்பனை சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர். கட்டுமானத்தில் செங்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இந்த சூளைகளில் தினசரி லட்சக்கணக்கான செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக செங்கல் விலை ஏறாமல் ஒரே மாதிரியான விலையில் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதத்தில் செங்கல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மூன்று மாதத்திற்கு முன்பு ₹15 ஆயிரத்திற்கு ஒரு லோடு செங்கல் (3ஆயிரம் எண்ணிக்கை) விற்றது. தற்போது ரூ18 ஆயிரம் என விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் வீடு கட்டுவோருக்கு மேலும் சுமை கூடியுள்ளது. இதனால் வீடு கட்டுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக செங்கல் விற்பனை சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை ெதரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் செங்கல் உற்பத்தி செய்தாலும், குறிப்பாக சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. சமீப காலமாக மணல் தட்டுப்பாடு, சிமெண்ட், கம்பி உள்பட கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும் செங்கல் உற்பத்தி செய்ய தேவையான வண்டல் மண்விலை, விறகு விலை, ஆட்கள் கூலி போன்றவை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக செங்கல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மாதம் ரூ4.50 பைசா முதல் ரூ5க்கு விற்ற ஒரு செங்கல் ரூ6 என விலை அதிகரித்துள்ளது. சேம்பர் செங்கல் ரூ7 எனவும், ரூ4 விற்ற சிமெண்ட் செங்கல் ரூ5 என விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
