சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.480 குறைந்து, மாலையில் ரூ.640 அதிகரித்தது. தங்கம், வெள்ளி விலை ஆண்டு இறுதியான கடந்த டிசம்பர் மாதத்தில் தாறுமாறாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 27ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4,800க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு தங்கம் விலை குறைந்தது. அதாவது கடந்த 29ம் தேதி முதல் தொடர்சியாக 4 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,280 வரை குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு ஆறுதலைஅளித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,580க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,00,640க்கும் விற்றது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் 1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியளித்தது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று காலை தங்கம் விலை திடீரென குறைந்தது.
அதாவது, காலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,160க்கு விற்றது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து கிராம் ரூ.256க்கும், கிலோவுக்கு ரூ.4 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. இந்த விலை குறைவு என்பது சில மணி நேரம் தான் நீடித்தது. மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தது. அதாவது, நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,600க்கும், பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 800க்கும் விற்பனையானது.
இதே போல மாலையில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.257க்கும், கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து, பார் வெள்ளி 2 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் விற்றது. தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
