×

பள்ளிகளில் மாணவர்கள் ‘உள்ளேன் ஐயா’ கூடாது ‘ஜெய் ஹிந்த்’சொல்ல வேண்டும்: குஜராத் அரசு உத்தரவால் சர்ச்சை

அகமதாபாத்: பள்ளிகளில் மாணவர்கள் வருகைப் பதிவேட்டிற்கு பதில் சொல்லும் போது, ‘யெஸ் சார்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ அல்லது ‘ஜெய் பாரத்’ என்றே  சொல்ல வேண்டுமென குஜராத் அரசு கட்டாயப்படுத்தியிருக்கும் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பள்ளிகளில் தினமும் காலையில் வகுப்பறை தொடங்கியதும் ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு எடுப்பார்கள். அப்போது மாணவர்கள் ஒவ்வொருவரும் ‘யெஸ் சார்’ என்று பதிலளிப்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இதை மாற்றி, ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் ‘யெஸ் சார்’ என்பதற்கு பதிலாக ‘ஜெய் ஹிந்த்’ அல்லது  ‘ஜெய் பாரத்’ என சொல்ல வேண்டும் என்று, குஜராத் மாநில அரசின் ஆரம்ப கல்வி இயக்குனரகம் மற்றும் நடுநிலை, உயர்நிலை கல்வி வாரியம் அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.குழந்தை பருவத்தில் இருந்தே தேசப்பற்றை ஊட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை எதிர்க்கட்சிகள் சர்ச்சை யாக்கி உள்ளன. இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமித் சாவ்தா கூறுகையில், ‘‘பள்ளி மாணவர்கள் மத்தியில் தேசப்பற்றை தூண்ட பாஜ அரசு பல்வேறு வழிகளில் செயலாற்றலாம்.  ஆனால், இதுபோன்ற மாற்றங்கள் ஒருபோதும் கல்வியின் தரத்தை உயர்த்தப் போவதில்லை. பள்ளிகளில் அடிப்படை வசதி, கல்வி தரத்தை மேம்படுத்துவது போன்றவற்றில் அரசு கவனம்  செலுத்த வேண்டும்’’ என்றார்.படிதார் சமூக தலைவர் ஹர்திக் படேல் கூறுகையில், ‘‘தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டுமென பள்ளி குழந்தைகளையோ, இளைஞர்களையோ யாரும் வற்புறுத்த கூடாது. இந்த  உணர்வு குஜராத் மக்களின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. அதை கல்வி அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.அமோக வரவேற்பு மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசின் சவுதசமா கூறுகையில், ‘‘யெஸ் சார் என்பதைக் காட்டிலும் ‘ஜெய் ஹிந்த்’ அல்லது ‘ஜெய் பாரத்’ என்று கூறுவது மேலானது. இது தேசப்பற்று  உணர்வை ஏற்படுத்தக் கூடியது. அதனாலேயே மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். அரசு பள்ளிகள் மட்டுமின்றி சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகளும் இதற்கு அமோக வரவேற்பு  அளித்துள்ளன’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,Gujarat , Students,schools,'sir' or 'jai hind',controversy ,Gujarat government order
× RELATED கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில்...