×

ரூ.465 கோடியில் திட்டப் பணிகள் சங்கரன்கோவில், சிவகாசிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர்: ‘மெகா சைஸ்’ குழாய்கள் பதிப்பு

நெல்லை: சங்கரன்கோவில், புளியங்குடி, சிவகாசி பகுதிக்கு தாமிரபரணி குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக சாலையோரங்களில் மெகா குழாய்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.நெல்லை மாநகரில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க தாமிரபரணி கூட்டு குடிநீர்த் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அரியநாயகிபுரம் தாமிரபரணி பகுதியில் இருந்து 914 மிமீ விட்டம் உள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு பேட்டை காமராஜர் நகர் பகுதியில் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு அங்கு இருந்து மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக பேட்டை பகுதியில் பெரிய அளவிலான தரைநிலை குடிநீர்த் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டப்பணியை 2018 டிசம்பர் இறுதிக்குள் முடித்து இம்மாதத்தில் தண்ணீர் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகியுள்ளது. தற்போது 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் கொண்டாநகரம் நீர்த்தேக்க பகுதியில் இருந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, திருவேங்கடம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், ராஜபாளையம் உள்ளிட்ட நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்காக ரூ.465 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

இதற்காக தற்போது கொண்டாநகரத்தில் இருந்து மானூர் ரஸ்தா, மானூர் மற்றும் நெல்லை-சங்கரன்கோவில் சாலையின் ஓரங்களில் மெகா சைஸ் குழாய்கள் இறக்கப்பட்டு உடனுக்குடன் பூமியில் பதிக்கப்படும் பணி மும்முரமாக நடக்கிறது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை சேதப்படுத்தாமல் சாலையின் ஓரப்பகுதியில் குழாய்கள் செல்லமாறு அமைக்கப்படுகிறது. இந்த திட்டப்பணி இதுவரை 20 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. கொண்டாநகரம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு தொட்டி ஒன்றும் பெரிய அளவில் அமைக்கப்படுகிறது. இத்திட்டபணி ஓராண்டுக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்கப்படுகிறது. அவ்வாறு நிறைவுபெற்றதும் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் வரை தாமிரபரணி குடிநீர் கிடைக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivakasi ,Tamaraparani ,Sankarankoil , Project works, Sankarankoil, Sivakasi, Tamaraparani joint drinking water, mega cycles, tubes
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து