×

‘யுடிஎஸ்-ஆப்’ஐ தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர்களுக்கு ‘டேப்லெட்’: சோதனை முறையில் அறிமுகம் செய்தது தெற்கு ரயில்வே

சென்னை தெற்கு ரயில்வே காகிதப் பயன்பாட்டுக்கு ‘குட்பை’ சொல்லும் வகையில், ‘யுடிஎஸ்-ஆப்’ஐ தொடர்ந்து, டிக்ெகட் பரிசோதகர்களுக்கு சோதனை முறையில் ‘டேப்லெட்’ வழங்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் காகிதத்தின் பயன்பாடு அதிகமாக இருந்தது. இதை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி ‘யுடிஎஸ்-ஆப்’ஐ அறிமுகம் செய்தது. இந்த ஆப்-ஐ பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு இருந்த  இடத்திலிருந்தே செய்துகொள்ள முடியும்.இந்த ஆப்-ஐ ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு மொபைல் போன், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு, பிரத்தியேக கணக்கை உருவாக்கிக்கொள்ள  முடியும். இதன் மூலம் விரும்பிய இடத்திலிருந்து டிக்ெகட் முன்பதிவு செய்துகொள்ளலாம். அதற்கான கட்டணத்தை டெபிட், கிரெடிட், நெட் பேங்கிங் உள்ளிட்டவற்றின் மூலம் செலுத்தலாம்.மேலும் ரயில்வேயில் ‘ஆர்-வேலட்’டில் பணத்தை செலுத்தி, அதிலிருந்து கட்டணம் செலுத்துவோருக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட ஆப்-ஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. மேலும் பேப்பர் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு ரயில்வேக்கு இத்திட்டம் பரவலாக வெற்றியை தேடி தந்துள்ளது.

இதையடுத்து ரயிலில் டிக்கெட் பரிசோதகர்களின் கையில் கொடுக்கப்படும், பயணிகள் விவரம் அடங்கிய அட்டவணை காகிதத்திலேயே கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையில் காகிதம் அதிக அளவில்  பயன்படுத்தப்படுவதால், அதை தடுக்க மாற்று வழி யோசிக்கப்பட்டது. அதன்விளைவாக பரிசோதகர்களுக்கு ‘டேப் லெட்’ வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த ‘டேப் லெட்’டில் டிஜிட்டல் வடிவில் பயணிப்போரின் விவரம் இடம்பெறும். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் ரயிலில் ஏறி, பயணிப்போரின் விவரத்தை ஆய்வு செய்து சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும்  சோதனையின் போது டிக்கெட் எடுக்காமல் பயணித்தல், கட்டணம் செலுத்தாமல் லக்கேஜ் எடுத்துச் செல்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்த விவரமும் உடனடியாக ‘டேப்லெட்’ல் பதிவு செய்து கொள்ள  முடியும். அதேபோல் டிக்கெட் பரிசோதகர் ஆய்வு செய்யும் போது, முன்பதிவு செய்து விட்டு பயணி வராவிட்டால், அந்த தகவலும் உடனடியாக ‘டேப் லெட்’ல் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட சீட் காலியாக அறிவிக்கப்படும்.  இதனால் மற்ற பயணிகள் எளிதாக சம்பந்தப்பட்ட ரயிலில் பயணிக்க முடியும். முன்பு இருந்த நடைமுறையில் காலி சீட் குறித்த விவரத்தை அறிவிக்க சற்று காலதாமதம் ஏற்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த  திட்டம் நேற்று சோதனை அடிப்படையில், சென்னை, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் துவங்கி வைக்கப்பட்டது. அதை தெற்கு மண்டல ரயில்வே பொது மேலாளர் குல்ரோஸ்தா, கோட்ட மேலாளர் நவீன் குலாத்தி  உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் துவங்கி வைத்தனர்.

முதல்கட்டமாக சென்னை - மைசூர், சென்னை - கோவை சதாப்தி ரயில்களில் பணியாற்றும் பரிசோதகர்களுக்கு டேப் லேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக அடுத்தகட்ட  ரயில்களில் அறிமுகம் செய்யப்படும்.

இதுகுறித்து நவீன் குலாத்தி நிருபர்களிடம் கூறியதாவது: ரயில்வேயில் காகிதமில்லா சேவை என்ற நோக்கத்தில் ஏற்கனவே பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் காலம் காலமாக காகிதத்தை  பயன்படுத்தி டிக்கெட்களை பரிசோதித்து வந்த டிக்கெட் பரிசோதகர்களுக்கு தற்போது நவீன ‘டேப் லெட்’ வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காகிதப்பயன்பாடு குறைக்கப்படும். அதுமட்டுமில்லாது காலி சீட்டுகள் குறித்த விவரம் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்படும். இதன்மூலம் திடீரென ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகள், இடையிலேயே  காலியாகும் இருக்கைகள் நிரப்பப்பட்டு நிர்வாகத்திற்கு ஏற்படும் நஷ்டம் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


பிரத்தியேக இன்டெர்நெட்
ரயிலில் பயணத்தின் போது இன்டர்நெட் சேவையில் பாதிப்பு ஏற்படும். அப்போது பரிசோதகர்கள் ‘டேப் லெட்’களை பயன்படுத்தும் போது சிக்னல் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்படும். இதை தவிர்க்க தற்போது  வழங்கப்பட்டுள்ள ‘டேப் லெட்’டுகளுக்கு பிரத்தியேக இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதகர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ticket Examiner ,Southern Railways , 'UTC-App' ,Ticket Examiner's ,'Tablet, Tested in Southern Railways
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்