×

ஜிஎஸ்டி மூலம் சிறு,குறு தொழில்களுக்கு ஜனவரியில் நல்ல அறிவிப்பு வரும்: அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை: ஜிஎஸ்டி மூலம் சிறு,குறு தொழில்களுக்கு ஜனவரியில் நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:   தமிழகத்தில் ஜனவரி 23, 24ம் தேதிகளில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. ஏறத்தாழ 17.25 லட்சம் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கி  வருகின்றன.2015ம் ஆண்டு நடந்த மாநாட்டில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டும் 16,533. இதில் 10 ஆயிரம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை ஏற்கனவே தமிழகம்தான்  அழுத்தம் கொடுத்தது.

சிறு குறு தொழில்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு கருத்துகளை வலியுறுத்தியதன் அடிப்படையில், வரும் ஜனவரி மாதம் நல்ல ஒரு சலுகைகள் ஜிஎஸ்டி மூலம் அறிவிப்பு செய்யப்பட  உள்ளது.  எங்களது கோரிக்கையானது, 20 லட்சத்துக்குள் உள்ள சிறு, குறு தொழில்கள் ஜிஎஸ்டிக்குள் வரக்கூடாது. அந்த தொகையை 75 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அது நிறைவேற்றப்பட்டால் சிறு, குறு தொழில்கள் ஜிஎஸ்டிக்குள் வராது. அதேபோன்று ஒரு கோடி வர்த்தகம் நடைபெறும்  நிறுவனங்களுக்கு இணக்க வரி வசூலிக்கப்படுகிறது. எனவே அந்த தொகையை ஒன்றரை கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். புத்தாண்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayakumar ,businesses , Small and marginal,businesses,announcements in January, GST, Minister Jayakumar says
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி...