×

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு: 5-ம் தேதி வரை 144 தடை நீட்டிப்பு

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு, 144 தடை உத்தரவு ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் 41 நாட்கள் நடந்த மண்டல கால பூஜைகள் கடந்த 27ம் தேதி நிறைவடைந்தது. அன்று மாலை நடை சாத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைகளுக்காக கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு பூஜைகள் நடக்கவில்லை. இன்று முதல் மகரவிளக்கு பூஜைகள், நெய்யபிஷேகம் ெதாடங்குகிறது.
பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடைபெறும். அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். 20ம் தேதி கோயில் நடை சாத்தப்படும்.

கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு, கடந்த 27ம் தேதி நடை சாத்தப்பட்டதால் வாபஸ் பெறப்பட்டது. மகர விளக்கு பூஜைக்கு நடை திறக்கப்பட்ட நிலையில், இந்த தடை உத்தரவை நேற்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை மீண்டும் விதித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூகு உத்தரவிட்டுள்ளார். 5ம் தேதி நள்ளிரவு வரையில் சன்னிதானம், பம்பை, நிலக்கல், இலவுங்கல் பகுதிகளில் இது அமலில் இருக்கும். மகர விளக்கு பூஜைக்காக 3,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஜனவரி 16ம் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு சொந்தமானதாகும். மகர விளக்கு பூஜையையொட்டி இந்த திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படும். மகர விளக்கு பூஜையன்று மாலை ஐயப்பனுக்கு இது அணிவிக்கப்படும். இதன்பிறகு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும்.

திருவாபரண ஊர்வலம் மீது தாக்குதல் நடத்த திட்டமா?
சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும்  விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக பந்தளம் அரண்மனை குடும்பத்தினர் குரல்  எழுப்பி வருகின்றனர். இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பந்தளம் மன்னர்  குடும்பத்துக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அரண்மனை  நிர்வாகிகள் மீதும்,  திருவாபரண ஊர்வலத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம்  என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பந்தளத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தினர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மகர விளக்கு பூஜைக்கு திருவாபரணத்தை சபரிமலை கோயிலுக்கு அனுப்பி வைத்தால் அது திரும்ப கிடைக்குமா என எங்களுக்கு சந்தேகம் உள்ளது என பந்தளம் அரண்மனை நிர்வாகி சசிகுமார் வர்மா கூறினார்.

மேலும், ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் மன்னர் குடும்ப பிரதிநிதி மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கு தேவசம்போர்டு ஆணையர் வாசு, திருவாபரணம் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்கப்படும். ஊர்வலத்துடன் வரும் பந்தளம் அரண்மனை பிரதிநிதிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து திருவாபரணத்தை அனுப்பி வைக்க பந்தளம் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala Temple Opening ,Makar , Sabarimala Temple,opening,Makar lamp Poojas,extensionm144
× RELATED சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை தரிசன நிகழ்வு: 9 பேர் மாயம்