×

லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவராக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமனம்: முதல்வர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்தது

சென்னை: லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவராக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமனை முதல்வர் தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு  செய்ய  வேண்டும். இதற்காக முதல்வர், சபாநாயகர் தனபால், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை கொண்ட தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக் குழு, மூன்று நபர்களை கொண்ட தேடுதல் குழுவை  அமைக்கும். அந்த தேடுதல் குழு தருகின்ற பெயர் பட்டியலை தேர்வுக் குழு பரிசீலித்து ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பும். அதைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் குறித்து  அறிவிக்கப்படும்.

இந்நிலையில் தேர்வுக் குழுவின் கூட்டம்  நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார். கூட்டத்தில் தேடுதல் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் தேர்வு செய்தனர். இதைத் தொடர்ந்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் எஸ்.சுவர்ணா அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் -2018-ன் அடிப்படையில் தேடுதல்  குழுவை தேர்வுக் குழு நியமித்துள்ளது. லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயரை தேர்வு செய்து சமர்ப்பிப்பதற்காக தேடுதல் குழு நியமிக்கப்படுகிறது. அந்த வகையில் தேடுதல் குழுவின் தலைவராக  சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை தேர்வுக் குழு நியமித்துள்ளது. மேலும், தேடுதல் குழுவின் உறுப்பினராக முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.  அதிகாரி ஏ.பாரி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : search committee ,K. Venkatraman ,selector ,Chief Minister , Chairman , Lok Ayukda, Panel, Former Judge K. Venkatraman ,
× RELATED துணைவேந்தர் தேடுதல் குழு தமிழ்நாடு...