×

மேகதாது அணை விவகாரம் கர்நாடகா முதல்வருடன் பேசுவது பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும்: சட்ட நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி: ‘மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது தொடர்பாக  மத்திய அரசு கூட்டும் இருமாநில முதல்வர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கலந்து கொள்வது பற்றி, தமிழக சட்டசபையில் விவாதித்து முடிவு எடுக்க  வேண்டும்’ என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு  ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை ரத்து செய்யக்கோரி,  நாடாளுமன்றத்தில்  தமிழக எம்பி.க்கள் தொடர்ந்து பிரச்னையை எழுப்புவதால்  அவை நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, கர்நாடக எம்.பி.க்களும்  எதிர் நடவடிக்கையில் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதால் பிரச்னை  விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த பிரச்னையில் சுமூக தீர்வு காண இரு மாநில  முதல்வர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுக்க முடிவு  செய்துள்ளது. மத்திய நீர்வளம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்  கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த புதன்கிழமை டெல்லியில்  சந்தித்து பேசிய பிறகு, இந்த முடிவுக்கு கட்கரி வந்துள்ளார்.

தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?  இந்த முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக, ஜனவரி 2ம் தேதி கூடும்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இது பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும்.   அதேபோல், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், பொதுப்பணித் துறை  மூத்த பொறியாளர்கள், சட்ட நிபுணர்கள், சர்வக்கட்சித் தலைவர்கள் அடங்கிய  சிறப்பு ஆலோசனை கூட்டத்தை அரசு நடத்த வேண்டும். இதில், மேகதாது  விவகாரத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசனை நடத்திய பிறகு,  முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டால் மாநில நலன்களை காக்கலாம் என்று  சட்ட நிபுணர்களும் பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்களும் கருத்து  தெரிவித்துள்ளனர். முக்கியம்  என்னென்ன: காவிரி பிரச்னையில் இதுவரையில் தமிழ்நாட்டிற்கு உரிய  பங்கீடு நீரை உரிய காலத்தில் வழங்காமல் கர்நாடகம் முரண்டுபிடித்து  வந்துள்ளது.

ஒப்பந்தங்கள், நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற  தீர்ப்புகள் இவை எவற்றையும் மதித்து நடந்து இல்லை. அதேபோல், காவிரியில்  தமிழக அரசு, மத்திய அரசு அனுமதியின்றி அணைகள் கட்டியுள்ளது. இதன்மூலம், தனது பாசனப் பகுதிகளை அதிகரித்தும், குடிநீர் தேவைக்கு  பயன்படுத்த ஏரி, குளங்களில் ராட்ச மோட்டார்கள் மூலம் தண்ணீர் நிரப்பிக்  கொண்டும் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்கவில்லை. மத்தியில் ஆட்சியில்  உள்ள எந்த அரசும் இந்த விதிமீறலை தட்டிக் கேட்காமல் உள்ளன. இதுவே,  கர்நாடகத்திற்கு சாதகமாக அமைந்து தன்னிச்சையாக செயல்படுகிறது.மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்கவே  கிடைக்காது. அதன் மூலம், கர்நாடகா தனது பாசனப் பகுதிகளுக்கு தண்ணீரை  திருப்பிச் சென்றுவிடும். காவிரியில் கீழ் பகுதியில் உள்ள கபினி, ஹேமாவதி,  கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி  வழக்கம்போல் கையை விரித்துவிடும். இந்த நிலை ஏற்படாது என்று மத்திய  அரசாலும் உத்தரவாதம் தர முடியாது என்பதே நிதர்சனம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meghatadu Dam ,Assembly ,Experts ,Karnataka High Court , Meghatadu Dam,discussed, Assembly, Karnataka High Court,Legal Experts
× RELATED ஜெயக்குமார் மரண வழக்கில் தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு!