×

புஜாரா அபார சதம்; கோஹ்லி, ரோகித் அரைசதம் 443 ரன் குவித்து இந்தியா டிக்ளேர்: மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால்

மெல்போர்ன்: மெல்ல்போர்ன் டெஸ்டில் புஜாரா அபார சதமும், கோஹ்லி, ரோகித் ஷர்மா அரை சதமும் அடிக்க இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கடும் சவாலுடன் ஆஸ்திரேலியா களமிறங்கி உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 89 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களுடன் இருந்தது. புஜாரா 68, கேப்டன் கோஹ்லி 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது.

முதல் ஓவரிலேயே கோஹ்லி தனது 20வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மாறுபட்ட ஆடுகளம் என்பதால், புஜாரா-கோஹ்லி ஜோடி, உணவு இடைவேளை வரை மிக பொறுமையாகவே ரன் சேர்த்தது. உணவு இடைவேளைக்குப் பின் புஜாரா, டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை எட்டினார். இந்த தொடரில் இவரது 2வது சதம் இது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 170 ரன் சேர்த்த நிலையில் கோஹ்லி (82) ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார். முதுகுவலியையும் பொருட்படுத்தாமல், ஸ்டார்க் வீசிய பந்துகளை அடுத்தடுத்து ‘கட் ஷாட்’களாக விளாசிய கோஹ்லி, பவுன்சர் பந்தை சிக்சருக்கு விரட்ட முயன்று, பவுண்டரி எல்லை அருகே பிஞ்ச் வசம் பிடிப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்த 4வது ஓவரில் கம்மின்ஸ் வேகத்தில் புஜாரா (106) ஆட்டமிழந்தார். திடீரென தாழ்வாக வந்த பந்தால் நிலைதடுமாறிய புஜாரா, கிளீன் போல்டானார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் பறிபோன போதும், ரகானே, ரோகித் ஜோடி தடுமாற்றம் ஏற்படாமல் பொறுப்புடன் விளையாடியது. இந்த ஜோடி 62 ரன் சேர்த்த நிலையில், நிதானமாக ஆடிய ரகானே (34) லயன் சுழலில் ஆட்டமிழந்தார்.  ரோகித் ஷர்மா, ரிஷப் பன்ட்டும் வழக்கத்துக்கு மாறாக பொறுமையை கடைபிடிக்க அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. 167வது ஓவரில் ஆஸ்திரேலியா புதிய பந்தை எடுத்ததும், ரிஷப் (39) ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜடேஜா (4) ஹேசல்வுட் வேகத்தில் வந்ததும் வெளியேறினார். இந்திய அணி 169.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன் சேர்த்த நிலையில், கேப்டன் கோஹ்லி எதிர்பாராத விதமாக ஆட்டத்தை டிக்ளேர் செய்தார்.

ரோகித் ஷர்மா 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 3, ஸ்டார்க் 2, ஹேசல்வுட், லயன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். கடின சவாலுடன் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி எஞ்சிய 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்தது. பிஞ்ச் 3, ஹாரிஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.

டிராவிட்டின் சாதனை கோஹ்லி முறியடிப்பு
அந்நிய மண்ணில் ஒரே ஆண்டில் டெஸ்ட் ேபாட்டியில் அதிக ரன் எடுத்த இந்தியர் என்ற ராகுல் டிராவிட்டின் 16 ஆண்டு கால சாதனையை கோஹ்லி நேற்று முறிடியத்தார். கடந்த 2002ம் ஆண்டு, அந்நிய மண்ணில் நடந்த டெஸ்டில் டிராவிட் 1137 ரன் எடுத்திருந்தார். 82 ரன்னில் ஆட்டமிழந்த ேகாஹ்லி சரியாக 1138 ரன்னுடன் புதிய சாதனை படைத்துள்ளார். கோஹ்லிக்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘வித்தியாசமான ஆடுகளம்’
2ம் நாள் ஆட்ட நேரத்திற்குப் பிறகு பேட்டி அளித்த புஜாரா, ‘‘மெல்போர்ன் ஆடுகளம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. பந்துகள் எழும்புவதை கணிப்பது ரொம்பவே சிரமமாக உள்ளது. இங்கு ஒருநாளில் 200 ரன் சேர்ப்பது என்பதே கடினம் தான். தற்போதுள்ள பார்மில் என்னால் 150 ரன்னை எட்டியிருக்க முடியும். ஆனால், திடீரென பந்து தாழ்வாக வந்ததால் ஆட்டமிழந்து விட்டேன். ஆனாலும், வெற்றிக்கு தேவையான ரன்னை நாங்கள் எடுத்திருக்கிறோம். இந்த ஆடுகளம் ஆஸ்திரேலிய அணிக்கு நிச்சயம் கடும் சவாலானதாக இருக்கும்’’ என்றார். புஜாரா 319 பந்தில் 106 ரன் எடுத்துள்ளார். இவர் அடித்த மெதுவான சதம் இதுவே.

லயன் பந்துவீச்சில் தவறிய 3 கேட்ச்கள்
ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு, மோசமான பீல்டிங்கால் 3 கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய வீரர்கள் கோட்டை விட்டனர். மூன்றுமே லயன் சுழலில்தான். 147வது ஓவரில் ரோகித் ஷர்மா அடித்த பந்தை, ஸ்கொயர் லெக் திசையில் மிக எளிதாக கேட்ச் பிடிக்க வேண்டியதை, மாற்று வீரர் சிட்டில் கோட்டை விட்டார். அடுத்த பந்திலேயே ரகானே தந்த கேட்ச்சை ‘ஷார்ட் லெக்’ திசையில் இருந்த ஹெட் தவற விட்டார். பொறுமையாக ஆடிய ரிஷப் பன்ட், ஒரே ஒருமுறை மட்டுமே 159வது ஓவரில் பந்தை தூக்கி அடித்தார். இதை ‘லாங்க் ஆன்’ திசையில் கேட்ச் பிடிக்காமல் கம்மின்ஸ் கோட்டை விட்டார். இதைப் பார்த்து லயன் நொந்தே போய் விட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kohli ,Rohit ,India , Bhujara, Kohli, Roghit, India, Digli, Australia
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...